Tuesday, 5 May 2015

பார்வையற்ற மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை திருவாரூர் மருத்துவகல்லூரி டாக்டர்கள் சாதனை























பார்வையற்ற மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை வழங்கி திருவாரூர் மருத்துவகல்லூரி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

கண்ணில் குறைபாடு
திருவாரூர் மாவட்டம், பேரளம் பகுதியை சேர்ந்தவர் பத்மா (வயது60). இவர் கடந்த 8 ஆண்டுகளாக கண் குறைபாடு காரணமாக பார்வையற்ற நிலையில் சிரமப்பட்டு வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந்தேதி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். அவரை டாக்டர் பிரமிளா பரிசோதனை செய்த போது பத்மாவிற்கு இடது கருவிழியின் மையப்பகுதியில் வெண் படலமும், கண் லென்சில் புரை விழுந்து இருப்பதும் கண்டுபிடிக்கபட்டது.

மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் ஆலோசனையின்படி, பத்மாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி டாக்டர்பிரமிளா தலைமையில் டாக்டர் கள் சிவக்குமார், நிறைமொழி ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் முதலில் கருவிழியில் உள்ள வெண்படலத்தை அகற்றினர். பின்னர் புரை விழுந்த லென்சு அகற்றப்பட்டு செயற்கை லென்சு பொருத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இறந்த ஒருவரிடம் தானாக பெறப்பட்ட கருவிழியை பத்மாவிற்கு பொருத்தி மெல்லிய தையல் போடப்பட்டது. பிறகு நோயாளிக்கு தேவையான கிருமி நீக்க மருந்து, சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. அறுவை சிகிச்சை செய்த மறுநாளே பத்மா பார்வையை திரும்ப பெற்றார்.

அறுவை சிகிச்சை

இதுகுறித்து மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளாக பார்வையற்ற நிலையில் சிரமப்பட்டு வந்த மூதாட்டி பத்மாவிற்கு சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை வழங்கி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. அனைத்துவித நோய் குறைபாடுகளுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. எனவே திருவாரூர் மாவட்ட மக்கள் உரிய முறையில் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment