Monday, 18 May 2015

செல்லிடப்பேசி கோபுர கதிர்வீச்சு பிரச்னைக்கு தீர்வு காண பரிந்துரை


செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
 இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு மத்திய முன்னாள் அமைச்சர் அஸ்வனி குமார் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து மின்காந்தக் கதிர்வீச்சு வெளிப்படுவது கவலைதரச்கூடிய பிரச்னையாகும். இதனால், மனிதர்களுக்கு உடல்நலன் பாதிப்பு ஏற்படுவதோடு, விலங்குகள், பறவைகள், தேனீக்கள் ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
 இந்த விவகாரத்தில், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றாலோ அல்லது உரிய விளக்கம் அளிக்கவில்லையென்றாலோ மக்களிடையே கவலையும், அரசுக்கு எதிரான எண்ணமும் ஏற்பட்டுவிடும்.
 ஆகையால், கதிர் வீச்சு விவகாரத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முழுமையாகத் தீர்வு காண வேண்டும். அதேபோல், செல்லிடப்பேசி கதிர்வீச்சு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எடுக்க வேண்டும்.
 செல்லிடப்பேசி கதிர்வீச்சு பிரச்னை தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தத் தீர்ப்புகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதனிடையே, வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை உள்கட்டுமானங்களை பலப்படுத்த வேண்டும் என்று நீர் ஆதாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அந்தக் குழுவின் பரிந்துரையில், இந்த விவகாரத்தில் உள்ளூர் நிர்வாகத்துக்கும், மத்திய நீர் ஆணையத்துக்கும் சரிவர ஒருங்கிணைப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment