Thursday, 28 May 2015

தமிழக மக்களை வாட்டி வதைத்த ‘கத்திரி’ வெயில் நாளையுடன் விடை பெறுகிறது


, 







தமிழக மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) விடை பெறுகிறது. சென்னையில் வெயிலுக்கு முதியவர் பலியானார்.

கத்திரி வெயில்

அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4–ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் மழையுடன் தான் தொடங்கியது. ஆனால் அதற்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. பெரும்பாலான நகரங்களில் வெயிலின் அளவு 108 டிகிரியை தொட்டது.

குறிப்பாக சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்து எடுத்தது. சென்னை மீனம்பாக்கத்தில் இந்த ஆண்டின் அதிகபட்சமாக கடந்த 24 மற்றும் 25–ந்தேதிகளில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதுகடந்த 10 ஆண்டுகளில் அடித்த அதிகபட்ச வெயில் அளவுகளில் ஒன்று. இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதையே தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். சிறுவர்களும் விளையாட செல்லாமல் வீட்டிலேயே டி.வி, முன்னால் அமர்ந்து பொழுதை கழித்தனர்.

அதிகபட்ச பதிவு

தமிழக மக்களை கடந்த 24 நாட்கள் வாட்டி வதைத்த அக்னிநட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) விடை பெறுகிறது. இனிவரும் நாட்களில் படிப்படியாக வெயிலின் அளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் தென்மேற்கு பருவமழையும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே பருவமழை தொடங்கும் போது, தமிழகத்தில் வெயிலின் அளவு வெகுவாக குறையவாய்ப்பு இருக்கிறது. அக்னிநட்சத்திரத்தின் இறுதிக்கட்டமான நேற்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெப்பத்தின் அளவு குறைந்தே காணப்பட்டது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–

இடியுடன் கனமழை பெய்யும்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று காலை 8½ மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர கணக்கீட்டின்படி அதிகபட்சமாக வேலூரில் 2 சென்டிமீட்டர் மழை பெய்தது. வடதமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வடதமிழ்நாட்டில் கடற்கரை மாவட்டங்களை தவிர உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய காற்றுடன் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

ஜூன் 3–ந்தேதி பருவமழை

அக்னி நட்சத்திரம் முடிவடைந்து ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலை ஏற்படும். வரும் 31–ந்தேதி பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் மழையின் அளவையும், காற்றின் வேகத்தையும் அடிப்படையாக கொண்டு தான் பருவமழை தொடங்கும் நாட்களை குறிக்க முடிகிறது.

இதில் 4 நாள்கள் முன்பாகவோ, பின்பாகவோ பருவமழை தொடங்கலாம். அந்த வகையில் ஜூன் 3–ந்தேதிக்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment