Saturday, 16 May 2015

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு


பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் உயர்த்தின. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.13-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.71-ம் உயர்த்தப்பட்டுள்ளன.
 புதிய விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
 சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்பட்டதாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 இதுகுறித்து இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து பிப்ரவரி வரை 10 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.
 அதன் பிறகு, பிப்ரவரி பிற்பாதியிலும், மார்ச் முதல் வாரத்திலும் இரு முறை அவற்றின் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அடுத்து வந்த மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது.
 இந்நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தற்போது உயர்ந்து வருகிறது. மேலும், இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மே 1-ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.96-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.37-ம் உயர்த்தப்பட்டன. தற்போது சர்வதேச அளவில் அதே சூழல் நீடிப்பதால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது.
 புதிய விலை நிர்ணயத்தின்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.13 அதிகரித்துள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.2.71 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
 அதைப் பொருத்தே வருங்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 சென்னை விலை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.66.09-ஆக இருந்தது. புதிய விலை நிர்ணயத்தின்படி, தற்போது அது ரூ.69.45-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ரூ.52.76-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், தற்போது ரூ.55.74-ஆக அதிகரித்துள்ளது.
 தில்லியில் பெட்ரோல் விலை ரூ.63.16-லிருந்து ரூ.66.29-ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூ.49.57-லிருந்து ரூ.52.28-ஆக அதிகரித்துள்ளது.
 மோடி அரசின் பரிசு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி, மக்களுக்கு வழங்கப்படும் பரிசாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இத்தகைய அறிவிப்புகள் மோடி ஆட்சியில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment