Tuesday, 19 May 2015

ஜிஎஸ்டி என்கிற பொருட்கள் சேவைகள் வரி


வரி விதிப்பது ஓர் அரசின் முக்கிய அதிகாரங்களில் ஒன்று. வரி விதிக்காத அரசு, அரசாக இருக்கவும் முடியாது. வரி என்பதே நாம் கட்டாயமாக அரசுக்கு செலுத்த வேண்டியத் தொகை, அதே நேரத்தில் ஒவ்வொருவரும் செலுத்திய வரிக்கு ஏற்ப தனக்கு அரசு சேவைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால் குடி உரிமை பெற்ற ஒவ்வொருவருக்கும் அரசின் சேவை களைக் கேட்கும் உரிமை உண்டு.
எதற்கு பொருட்கள் சேவைகள் மீது வரி?
ஒவ்வொருவரும் அவரின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப வரி செலுத்தவேண்டும் என்பது ஒரு கோட்பாடு. வரி செலுத்தும் திறனை அறிய ஆண்டு வருமானம் ஒரு சிறந்த குறியீடு, எனவே வருமான வரி முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், ஒருவரின் வரிசெலுத்தும் திறன் முழுவதையும் வரியாக அரசு எடுத்துக்கொண்டால் அவர் மேலும் உழைப்பதற்கான ஊக்கத்தை இழக்கக்கூடும், அல்லது வரி செலுத்துவதைத் தவிர்க்கக் கூடும். வருமான வரி விகிதத்தை அதிகமாக வைக்கக்கூடாது என்பது ஒரு கருத்து.
பலரின் ஆண்டு வருமானத்தைக் கண்டறிந்து கணக்கிடுவது கடினம், ஆகையால் அவர்கள் குறைவான வருமான வரி செலுத்தலாம். இப்படி பல காரணத்தால், அரசுக்கு வருமான வரியில் இருந்து போதிய வரி வருவாய் கிடைப்பதில்லை; அரசு வேறு வரி ஆதாரங்களைத் தேடவேண்டியுள்ளது.
சொத்து வரி, (wealth tax) பரிசு வரி (gift tax) சொத்துகள் பரிமாற்றத்தின் மீது முத்திரைத் தாள் வரி (stamp duty) எல்லாமே இவ்வாறான வரி கோட்பாட்டின் அடிப்படையில் உருவானதுதான். இவையும் போதிய வரி வருவாயை பெற்றுத்தரவில்லை. இவை எல்லாமே நேர்முக வரிகள்தான், ஏனெனில், யார் வருமானம்/சொத்து பெறுகிறாரோ அவரே நேரடியாக அரசுக்கு வரியைச் செலுத்துவதால் இவை நேர்முக வரிகள்.
ஒருவரின் வரி செலுத்தும் திறனின் அடுத்த குறியீடு அவர் வாங்கும் பொருட்களின் மதிப்பு; பொருட்களின் மேல் வரி விதிப்பது அடுத்த முக்கியமான வரியாக மாறியது. பொருட்கள் கடைசி நுகர்வுக்கு வரும்போது அந்த இடத்தில் வரி விதிப்பதுதான் உத்தமம். அப்படியானால் கடைசி சில்லரை வாணிபத்தில் (retail sales tax) மட்டுமே வரி விதிக்கப்படவேண்டும்.
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சில்லரை வியாபாரம் என்பது மிகச் சிறிய அளவில் பலகோடி வியாபாரிகளால் செய்யப்படுவது, எனவே சில்லரை வியாபார வரியை மட்டுமே விதித்து நமக்குத் தேவையான வரி வருவாயைப் பெறமுடியாது. உற்பத்தி முதல் சில்லரை வியாபாரம் வரை எல்லா நிலைகளிலும் வரி விதிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
பொருட்கள், பணிகள் வரி
பொருட்கள் மீது வரிவிதிக்கும் அதிகாரத்தை மத்திய மாநில அரசுகள் பிரித்துக்கொண்டன. இறக்குமதி மீது சுங்கவரி (customs duty) விதிப்பதை, பொருள் உற்பத்தி மீது உற்பத்தி வரி (excise duty) விதிப்பதை மத்திய அரசும், பொருள் விற்பனை மீது விற்பனை வரி (sales tax) விதிப்பதை மாநில அரசும் எடுத்துக்கொண்டன.
ஒரு மாநிலத்துக்குள்ளேயே விற்பனை நடக்கும் போது அம்மாநில அரசு விற்பனை வரி வசூலிப்பது ஏற்புடையது. ஒரு மாநில வியாபாரி மற்றொரு மாநில வியாபாரிக்கு பொருள் விற்கும் போது எந்த மாநிலம் அந்த விற்பனை மீது வரி விதிப்பது என்ற சிக்கல் எழுந்தது.
இதற்காக மத்திய விற்பனை வரி (Central Sales Tax - cst) ஒன்றை மத்திய அரசு உருவாக்கி, அதன்படி எந்த மாநிலத்தில் வியாபாரம் உருவாகிறதோ அந்த மாநில அரசுக்கு 4% வரை விற்பனை வரி செலுத்தவேண்டும் என்றது, இப்போது CST வரிவிகிதம் 2% ஆக குறைந்துள்ளது. இதுமட்டு மல்லாமல் சில மாநில அரசும் octroi, entry tax போன்ற நுழைவு வரிகளும் விதிக்கின்றன.
1990 களுக்குப் பிறகு பல சேவைகளை வரி விதிப்புக்கு உட்படுத்தவேண்டும் என்ற யோசனை உருவானது. இந்திய அரசியல் சட்டத்தில் எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி மத்திய அரசு எல்லா சேவைகள் மீதும் சேவை வரி விதித்தது. சேவை வரி இன்று மத்திய அரசின் முக்கிய வரி ஆதாரங்களில் ஒன்று.
மறைமுக வரிகள்
பொருட்கள், சேவைகள் மீது வரி விதித்து அதனை வியாபாரிகள்தான் செலுத்தவேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், அந்த வரிகளைச் செலுத்துவது நுகர்வோர்தான். ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது அதன் மீதான வரி விற்பனை சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். நுகர்வோர் செலுத்தும் வரியை வாங்கி வியாபாரி அரசுக்குக் கொடுக்கிறார்.
விற்பனை வரியை அரசுக்கு நேரடியாக நுகர்வோர் செலுத்தாமல், மறைமுகமாக வியாபாரி மூலம் செலுத்துகிறார். இந்த வகையில் வியாபாரி ஒரு வரி வசூலிப்பவர்தான், அவர் தன்னுடைய பணத்தை வரியாகச் செலுத்துவதில்லை. இந்த வரியை வசூலித்து கொடுக்கும் சேவைக்கு ஆகும் செலவை அவர் நுகர்வோரிடமிருந்து விலை மூலம் பெறவேண்டும்.
இந்த வகை வரி வசூலிக்கும் முறை வரி வசூலிக்கும் செலவைக் குறைக்கும். நாட்டின் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மாதம் தோறும் தாங்கள் வாங்கும் எல்லா பொருட்களையும் கணக்கு வைத்து அரசுக்கு வரி செலுத்தவேண்டும் என்றால், அரசு அதிகாரி எவ்வளவு கணக்குகளை சரிபார்க்கவேண்டும்.
ஆனால் ஒரு மாநிலத்தில் பல கோடி குடும்பங்கள் இருந்தாலும் சில ஆயிரம் வியாபாரிகளே உள்ளனர். அவர்களிடம் வரி வசூலிப்பது எளிது, செலவும் குறைவு. பொருட்கள், சேவைகள் மீதுள்ள வரியினால் எழும் பொருளாதார பிரச்சினைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.
பொருட்கள், சேவைகள் மீது வரி விதித்து அதனை வியாபாரிகள்தான் செலுத்தவேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், அந்த வரிகளைச் செலுத்துவது நுகர்வோர்தான். ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது அதன் மீதான வரி விற்பனை சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். நுகர்வோர் செலுத்தும் வரியை வாங்கி வியாபாரி அரசுக்குக் கொடுக்கிறார்.

No comments:

Post a Comment