மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐ.டி.பி.ஐ வங்கி (இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி) அதிகாரி அந்தஸ்தில் 500 நிர்வாகிகளைப் பணியமர்த்த இருக்கிறது. ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பினர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் உரிய தளர்வு உண்டு.
தேர்வுகள்
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில், ரீசனிங், ஆங்கிலம், கணிதத் திறன் ஆகிய மூன்று பகுதிகளிலிருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும்.
ஒன்றரை மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். தவறான விடைக்கு மைனஸ் மார்க் உண்டு. அதாவது, நான்கு கேள்விகளுக்குத் தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்படும்.
குறைக்கப்படும்
இந்தப் பணிக்குத் தேர்வுசெய்யப்படுபவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) ஆகலாம். பணிக்காலத்தில் முதல் ஆண்டு தொகுப்பூதியமாக மாதம் ரூ.17 ஆயிரமும், 2-ம் ஆண்டில் ரூ.18,500-ம், 3-ம் ஆண்டில் ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். நிர்வாகி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில் (www.idbi.com ) மே 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கியமான நகரங்களில் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை ஜூன் 30-ம் முதல் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சிறப்புப்பயிற்சி
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பினர்களைத் தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் வங்கி சார்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி ஜூலை 5-ல் தொடங்கி 10-ம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்கள் தேர்வு மையங்களில் நடைபெறும். இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தவறாமல் இது குறித்து குறிப்பிட்டுவிட வேண்டும்.
No comments:
Post a Comment