Sunday 31 May 2015

திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் நகரசபை தலைவர் தகவல்


திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் கூறினார்.
நகரசபை கூட்டம்திருவாரூர் நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் சிவசங்கரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–
செந்தில் (துணைத்தலைவர்):– ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால் தான் திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். ராணுவ நகரில் ஒரு மாதத்துக்கு மேலாக பாதாள சாக்கடை குழாயில் கசிவு உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
சம்பத் (காங்கிரஸ்):– அனைத்து வார்டுகளிலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தாஜுதீன் (தி.மு.க.):– 27–வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தெரு விளக்கு சீரமைப்புகாமராஜ் (தி.மு.க.):– 20–வது வார்டில் அனைத்து தெரு விளக்குகளும் நீண்ட காலமாக ஒளிரவில்லை. தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும்.
அசோகன் (தி.மு.க.):– காட்டுக்கார தெருவில் குடிநீர் குழாய் பழுதடைந்து இருப்பதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாலையும் சீரமைக்கப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவையான சாலை, குடிநீர் வசதியில் உள்ள குறைபாடுகளை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுமையாக அகற்றப்படும்வரதராஜன் (சுயேச்சை):– ராஜா தெருவில் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அப்பகுதியில் குடிநீர் வழங்கும் பணியும் கடந்த சில நாட்களாக சரிவர நடைபெறவில்லை.
ரவிச்சந்திரன் (நகரசபை தலைவர்):– திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும். திருவாரூரில் உள்ள ராணுவ நகரில் பாதாள சாக்கடை குழாய் கசிவை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மின்விளக்குகளை ஒளிர செய்ய தேவையான சாதனங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மின்சாதனங்கள் வந்தவுடன் பழுதடைந்த தெரு விளக்குகள் உடனே சீரமைக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் சீராகும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment