Thursday, 21 May 2015

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: செயல் திட்டத்தை வகுத்தது தேர்தல் ஆணையம்


வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்களது சொந்த ஊர்களில் நடைபெறும் தேர்தல்களில், மாற்று நபர் அல்லது இணைய சேவையின் மூலம் வாக்களிப்பதற்கு உரிமை அளிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான செயல் 
 திட்டத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
 அந்தச் செயல்திட்ட அறிக்கை தற்போது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தில்லியில் புதன்கிழமை பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்த செயல்திட்டத்தை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
 தேர்தல் ஆணையத்திடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சம் 12,000 வெளிநாடுவாழ் இந்தியர்கள் மட்டுமே தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களிக்க அதிகப் பணம் செலவாகும் என்பதால் பலர் வருவதில்லை.
 இணையதள வாக்குச்சீட்டு: மனு தாக்கல் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை 14 நாள்கள் இடைவெளி உள்ளது. 
 இந்த இடைப்பட்ட காலத்தில், அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களுக்கான வாக்குச் சீட்டை அச்சடித்து அனுப்பி வைப்போம். அதில் வாக்களித்து வாக்காளர் திருப்பி அனுப்பி வைப்பார்.
 இந்தக் கால விரயத்தை குறைக்கும் வகையில், வாக்குச் சீட்டை இணையதளம் மூலம் அனுப்பி வைக்கலாம் என சட்ட அமைச்சகத்துக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது என்றார் நஸீம் ஜைதி.
 இதுகுறித்து சட்ட அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
 புதிய திட்டத்தின்படி, இணையதளத்தில் அனுப்பி வைக்கப்படும் வாக்குச்சீட்டை வாக்காளர் பதிவிறக்கம் செய்வதற்கான ஒருமுறைப் பயன்பாட்டு கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வேர்டு) வழங்கப்படும்.
 அந்தச் சீட்டில் வாக்களித்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்காளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
 இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சீட்டை, அருகிலுள்ள இந்தியத் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கலாம் என்ற யோசனையும் பரிசீலனையில் உள்ளது.
 அந்த வாக்குச்சீட்டுகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அல்லது தேர்தல் ஆணையத்துக்கு, இந்தியத் தூதரகங்கள் அனுப்பிவைக்கும்.
 பின்னர், அந்த வாக்குச்சீட்டுகள் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சட்ட அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சட்டத் திருத்தம்: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வகையில், 1950, 51 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகளில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
 மாற்று நபர் மூலம் வாக்களிக்கும் உரிமை (பதிலி வாக்குரிமை) பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வருகிறது.
 "தங்களது சொந்தத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயாராகும்போது, வெளிநாடுவாழ் வாக்காளர் என்று பதிவு செய்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும்' என தேர்தல் ஆணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 வாக்காளருக்கான தகுதி: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெறாதவராக இருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இந்தியாவில் வாக்குரிமை பெற முடியும்.
 இதேபோல், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாட்டின் எந்தவொரு பகுதிக்கு குடிபெயர்ந்தாலும், அங்குள்ள தொகுதிகளில் பொதுமக்கள் வாக்குரிமை பெறலாம்.
 

No comments:

Post a Comment