நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான மாகி நூடுல்ஸில் நச்சுப்பொருள் கலந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த நிறுவனத்தின் மீது, உத்தரப் பிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு, மருந்து தரக் கட்டுப்பாட்டு நிர்வாகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதவிர, அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக, ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பாராபங்கி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரி வி.கே.பாண்டே கூறியதாவது:
மாநில உணவுப் பாதுகாப்பு, மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரி பி.பி.சிங்கின் அனுமதியுடன், நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு எதிராக பாராபங்கி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நெஸ்லே நகால் கலன் தொழிற்சாலை, தில்லியைச் சேர்ந்த நெஸ்லே இந்தியா, தில்லியில் உள்ள ஈஸி டே தலைமை விற்பனையகம், பாராபங்கியில் உள்ள ஈஸி டே விற்பனையகம், அந்த நிறுவனத்தின் மேலாளர்களான மோகன் குப்தா, ஷபாப் ஆலம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் வி.கே.பாண்டே.
முன்னதாக, பாராபங்கியில் உள்ள ஈஸி டே விற்பனையகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாகி நூடுல்ஸ் மாதிரிகளை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், மோனோ சோடியம் குளூடேமேட், காரீயம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, 17 மடங்கு அதிகமாக காரீய நச்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடேயே, மாகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக, அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட 3 பேர் மீது உள்ளூர் வழக்குரைஞர் ஒருவர் பாராபங்கி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
திரையுலகைச் சேர்ந்த இந்த பிரபலங்கள், அதிக அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, மாகி நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு என விளம்பரங்களில் நடித்துள்ளனர்.
இது, குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர் நலனில் விளையாடும் செயலாகும் என்றார் அந்த வழக்குரைஞர்.