மக்களவைத் தேர்தல் முடிவுகளைவிட எதிர்பாராதது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள். தமிழ் மொழிப்பாடம் படித்து அரசு தரவரிசையில் இடம் பெறுபவர்களில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பெறுவோர் 19 மாணவர்கள், 498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தில் 125 மாணவர்கள்; 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தில் 321 மாணவர்கள். இது நீங்கலாக, சம்ஸ்கிருதம், பிரெஞ்சு படித்து, அரசுப் பட்டியலுக்கு அப்பால் 500க்கு 500 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மூன்று பேர்.
இந்த மதிப்பெண்கள், பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்றாலும், இது மேலதிகமாகத் திகட்டுகிறது. இந்தச் சாதனை, அடுத்து இவர்கள் பயணிக்க இருக்கும் போட்டி உலகில் கை கொடுக்காது என்பதால், சாதித்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுவதைவிட இந்த மாணவச் செல்வங்கள் மீது ஒருவிதப் பரிதாபமே மிஞ்சுகிறது.
துல்லியமாக விடைதிருத்தும் ஆசிரியர்கள் 3 மதிப்பெண் கேள்விக்கான பதிலை மூன்று பகுதியாக பிரித்து, மூன்று மதிப்பெண் ஒதுக்குகிறார்கள். அசோகர் பற்றி குறிப்பு வரைக என்ற கேள்விக்கு, 1. அசோகர் கலிங்க மன்னர், 2. பெளத்தமதம் தழுவினார், 3. அறம் வளர்த்தார் என்று மூன்று விஷயங்கள் (பாயின்ட்) எழுதப்பட்டு இருந்தால் தலா ஒரு மதிப்பெண் வழங்கலாம் என்கிறது விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டி. விடைத்தாள் திருத்தும் ஆசிரியரும் ஒரு பிழைகாட்டி மென்பொருள் போலத்தான் செயல்படுகிறார். மன்னர், பௌத்தம், அறம் என்ற மூன்று வார்த்தைகளைத் தேடி, மூன்று மதிப்பெண் வழங்குகிறார். இதற்கு மேலாக மாணவனின் விவரமான கருத்துப்பதிவு, சொல்வளம், அழகான கையெழுத்து எதுவுமே அவருக்கு முக்கியமல்ல. இத்தகைய இயந்திர மதிப்பீட்டில் நிச்சயமாக 500க்கு 500 சாத்தியமே! ஆனால் இதில் பெருமை பேசிட ஏதுமில்லை.
அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானபோது, ஆங்கிலத்தில் ஒரு மாணவி 199 மதிப்பெண் பெற்றதை ஆசிரியர் சங்கங்கள் கேள்வி எழுப்பின. மொழித்தாளில் கட்டுரைக்கும் மற்றொரு வினாவுக்கும் அதிகபட்சம் 9 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கிட, விடை திருத்தக் குறிப்பேடு வழிகாட்டுகிறது. அந்தவகையில் எவ்வளவு சிறப்பாக எழுதியிருந்தாலும் மொழிப்பாடத்தில் 198 மதிப்பெண்கள் மட்டுமே வழங்க முடியும். எப்படி இந்த மாணவிக்கு 199 வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இப்போது 500க்கு 500 மதிப்பெண் கிடைக்கும்போது அத்தகைய கேள்விகள் எல்லாமும் அர்த்தமற்றவையாகிப் போகின்றன.
பத்தாம் வகுப்புத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியரிடம் காணப்படும் தன்னம்பிக்கையும், வருங்காலம் பற்றிய தெளிவான சிந்தனையும், இந்த மதிப்பெண்களைப் பெறுவதற்காக அவர்கள் முன்வைத்த உழைப்பும் பேருவகையும், பெருமிதமும் கொள்ள வைக்கின்றன. இந்த வெற்றிக்குக் காரணமான பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவிப்பதைக் கேட்கும்போது அடுத்த தலைமுறை முற்றிலுமாக அடிப்படை மனிதப் பண்புகளை இழந்துவிடவில்லை என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
அதே நேரத்தில் பிளஸ் டூ முடித்துவிட்டுப் பல்கலைக்கழக அளவிலும், பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அரங்கத்திலும் இவர்கள் அடியெடுத்து வைக்கும்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவ - மாணவியருடன் இவர்களால் போட்டி போட முடியுமா என்கிற கேள்வி நம்மை பயமுறுத்துகிறது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். மதிப்பெண் அடிப்படையில் உயர் தொழிற்கல்வி நிறுவனங்களில் இவர்கள் இடம் பெற்றாலும்கூட, அங்கே ஏனைய மாணவர்களுடன் போட்டிபோட முடியாமலும், செமஸ்டருக்கு செமஸ்டர் நடைபெறும் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமலும் பரிதவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. அகில இந்தியத் தேர்வுகளில் இவர்களில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற முடிவதில்லை.
மதிப்பெண்களை வாரி வழங்கி 90.7 விழுக்காடு தேர்ச்சி விகிதம் காட்டுவது மட்டுமே பள்ளிக் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்காது. அந்த மாணவ - மாணவியரின் கல்வித் தரத்தில்தான் பெருமை இருக்கிறது.
மனப்பாடம் செய்வது மதிப்பெண்கள் பெறுவது என்கிற நிலைமை தொடர்வது தமிழகத்தின் வருங்காலத்தையே பாழ்படுத்தி விடும். தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்தியாக வேண்டிய தருணம் இது.
No comments:
Post a Comment