ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக திருவாரூர் நகர அமைப்பு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானைச் சேர்ந்தவர் இளங்கோவன் (40). திருவாரூரில் ஆப்செட் பிரிண்டர் கடை நடத்தி வரும் இவர், திருவாரூர் நகராட்சி மூலமாக ராஜீவ் காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்தில் வீடு கட்டிவருகிறார்.
திட்டத்தின்படி 3 தவணையாக தொகைக்கான காசோலை வழங்கப்படுகிறது. இதில் இரு தவணைக்கான காசோலையை இளங்கோவன் ஏற்கெனவே பெற்றுக்கொண்டார். 3-வது தவணைக்கான காசோலையை பெற திருவாரூர் நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜனை (42) இளங்கோவன் அணுகியுள்ளார்.
அப்போது, கட்டடம் நகராட்சி விதிமுறைப்படி கட்டவில்லை, எனவே, அதை சரிசெய்ய தனக்கு ரூ. 25,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என நாகராஜன் கேட்டாராம். அவ்வளவு தொகை கொடுக்க இயலாது எனக் கூறிய இளங்கோவனிடம், ரூ. 18,000 இரு தவணையாக கொடுக்குமாறு நாகராஜன் கூறினாராம்.
இதற்கிடையே, லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோவன், நாகப்பட்டினத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார்.
இதன்பேரில், துணைக் கண்காணிப்பாளர் சிவஞானவேல், ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை திருவாரூர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து, இளங்கோவனிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்திருந்தனர்.
அப்போது, இளங்கோவன் நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜனிடம் பணத்தை கொடுக்கும் போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நாகராஜனை கைது செய்து, திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
No comments:
Post a Comment