முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என மத்திய சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறியதற்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட நஜ்மா, முஸ்லிம்கள்
சிறுபான்மையினர் அல்ல என்றும் பார்சிகள்தான் சிறுபான்மையினர் எனவும் கூறி
இருந்தார். இதைக் கண்டித்து, வட இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் 'தி
இந்து'விடம் கருத்து கூறினர்.
உ.பி.யில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை
பேராசிரியர் முப்தி ஜாஹீத்கான் கூறியதாவது:
பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பது ஒன்றுக்கு ஒன்று
தொடர்புடையது. ஆந்திர மாநில அரசு மீது டி.எம்.ஏ.பாய் தொடுத்த வழக்கை 11 நீதிபதிகள்
கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், மாநில வாரியாக எடுக்கப்படும்
கணக்கில் 15 சதவீதத்துக்கும் கீழ் உள்ளவர்கள் சிறுபான்மையினர்களாகக் கருதப்
படுவார்கள் எனத் தீர்ப்பளித்தனர்.
தொடக்கக் காலத்தில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன சட்டப்படி கல்வி,
பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களும் சிறுபான்மையினர் ஆவர் எனவும் குறிப்பிடப்
பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் நம் நாட்டின் ஆறு மாநிலங்களில் இந்துக்கள்
சிறுபான்மையினர். எனவே நஜ்மா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்த
முயற்சிக்கிறார். இது, இந்திய அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது. நஜ்மா
தனது கருத்தை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றார்.
உ.பி.யின் பைசாபாத்திலுள்ள ஹிலால் கமிட்டியின் அமைப்பாளர் காலீக்
அகமதுகான் கூறியதாவது:
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சராக
பொறுப்பேற்றுள்ள தாவர் சந்த் கெல்லட், முந்தைய காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு
அளிக்க முயன்ற 4.5 சதவிகித ஒதுக்கீடு மதத்தின் அடிப்படையிலானது என்பதால்
சட்டத்துக்கு புறம்பானது எனவும் கூறி இருந்தார்.
கல்வித் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி, மதரசாக்களில் அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை இனி மத்திய அரசு
தரத் தேவை இல்லை எனவும் கூறி இருந்தார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு
மத்திய அரசு அளித்த உதவித்தொகைகளை, ‘இங்கு அனைவரும் சமமே’ எனக் கூறி அதை
அவர்களுக்கு அளிக்க மறுத்து விட்டார். இதையே பிரதமராகி நாடு முழுவதும் அமலாக்க
முயல்கிறார்.
இதன்மூலம், மௌலானா அபுல் கலாம் நிறுவனம் சார்பில் முஸ்லிம்களின்
கல்விக்காக கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவிகள்
முற்றிலுமாக நின்று போய் விடும். சச்சார் கமிட்டி பரிந்துரையின் பேரில் ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு அமல்படுத்திய ஒருசில திட்டங்களையும் தகர்க்கும் முயற்சி
இது.
முஸ்லிம்கள் வங்கதேசத்தினரா?
தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி, மேற்கு வங்கத்தில் அனைவரும் துர்கா
பூஜை செய்வதாகவும் அதை செய்யாதவர்கள் வங்கதேசத்துக்கு அனுப்பப்படுவார்கள் எனவும்
கூறி இருந்தார். அப்படியானால், முஸ்லிம்கள் அனைவரையும் வங்கதேசத்தினர் என்கிறாரா
மோடி?
நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான
மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த நஜ்மா இவ்வாறு கூறுவது
ஆச்சரியமாக உள்ளது. பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வந்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை
பரப்பும் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
முட்டாளாக்கும் முயற்சி
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய செயற்குழு உறுப்பினரும் டெல்லி
சிறுபான்மையினர் நல ஆணைய முன்னாள் தலைவருமான கமால் ஃபரூக்கி கூறியதாவது:
சட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நஜ்மா பேசியுள்ளார்.
அவர் பார்சிகள் மட்டும் சிறுபான்மையினர் எனக் கூறியிருப்பதும் தவறு. நம் நாட்டின்
கொள்கைகளின்படி, சீக்கியர், கிறித்துவர், புத்திஸ்ட், ஜெயினர்கள், முஸ்லிம்கள் ஆகிய
ஐந்து சமூகத்தினரும் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நிலையில் நஜ்மா கூறியிருப்பது
மக்களை முட்டாளாக்கும் முயற்சி.
4.5 சதவீத இட ஒதுக்கீடு
காங்கிரஸ் தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு அளிக்க முயன்ற 4.5
சதவீத இட ஒதுக்கீடு முஸ்லீம்களுக்கானது மட்டும் அல்ல. நம் அரசியல் சட்டத்தின்படி
மதத்தின் பெயரால் எந்த சமூகத்தினருக்கும் ஒதுக்கீடு அளிக்க முடியாது என்பது
எங்களுக்கும் நன்றாக தெரியும்.
எனவே, காங்கிரஸ் அரசு அளித்தது ஓ.பி.சி.யில் ஒரு உள் ஒதுக்கீடு.
ஓபிசியில் இந்துக்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான சமூகம் உள்ளது. இதில், குறிப்பாக
சக்தி வாய்ந்ததாக யாதவர் சமூகம், பெரும்பாலானதை அபகரித்துக் கொள்கிறது.
இதுபோல் கர்நாடகா மாநிலத்தில் முதல்வராக இருந்த மொய்லி அளித்ததுதான்
சிறுபான்மையினருக்கான சலுகைகளில் தாய் போன்றது எனக் கூறலாம். இதில், அவர் அளித்த
நான்கு சதவிகித ஒதுக்கீடு, அவருக்குப் பின் பாரதிய ஜனதா உட்பட பல்வேறு கட்சிகளின்
ஆட்சியிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சட்டப்படி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பினருக்கான
ஒதுக்கீட்டில் பயன் அடைந்து வருபவர்கள் இந்துக்கள் மட்டுமே. இதுபோல்
முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பதில் மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? நஜ்மா
கூறியது சரி அல்ல. இதற்காக நான் அவர் மீது கடுமையான சொற்களை பயன்படுத்த
விரும்பவில்லை என்றார்.
No comments:
Post a Comment