Wednesday, 14 May 2014

தாய்மொழி வழிக் கல்விக்கு மரண தண்டனை



அண்மையில் (மே, 2014) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தாய்மொழி வழியாகக் கல்வி வழங்கச் சட்டத்தின் துணையை நாடுவோருக்கு உச்சந்தலையில் விழுந்த அடி. அப்படிப்பட்ட சட்டம் இந்திய அரசியல் சட்டத்தை மீறியதாகும் என்பது இந்தத் தீர்ப்பின் சாராம்சம். தொடக்கக் கல்வியில் (வகுப்புகள் 1-4) கன்னடம் உள்ளிட்ட தாய்மொழிகள் கல்விமொழியாக இருக்கும் என்ற கர்நாடக அரசின் ஆணையை நிராகரித்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது; அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடிசெய்து வழங்கிய தீர்ப்பு இது. அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் ஒருமித்த தீர்ப்பு.
 
அரசியல் சட்டம்
 
அரசியல் சட்டத்திலுள்ள ஷரத்துகளில் சில, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியவை; சில, அரசின் பொறுப்புகள் பற்றியவை. அரசியல் சட்டத்தில் அரசின் பொறுப்புகள்பற்றிய பகுதியிலேயே ஒரே ஒருமுறை தாய்மொழி என்ற கருத்து வருகிறது. மொழிவழி மாநிலப் பிரிவினை ஆணையத்தின் பரிந்துரையின்மீது (1955) அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு ஷரத்து, ஒரு மாநிலத்திலுள்ள மொழிச் சிறுபான்மையினருக்குத் தொடக்கக் கல்வியை முடிந்தவரை தாய்மொழியில் வழங்குவதை மாநில அரசுகளின் பொறுப்பு ஆக்கியது. மற்றவர்களின் கல்வியை அவர்கள் தாய்மொழியில் தருவது அரசின் பொறுப்பு என்று அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. இது உச்ச நீதிமன்றத்தின் ஒரு முடிவு.
ஆனால், 1949-ல் மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டின் தீர்மானப்படி எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வி தரப்பட வேண்டும்; இதைக் கல்விக் கொள்கையாக இந்திய அரசும் ஒப்புக்கொண்டது. கர்நாடக அரசுக்கும் அம்மாநில ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளுக்கும் இடையே நடந்த வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றமும் இதை ஒப்புக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், புதிய வழக்கில் இந்தக் கல்விக் கொள்கையை அரசு எல்லா வகையான பள்ளிகளிலும் கட்டாயமாக அமல்படுத்தலாம் என்பது தன் பழைய தீர்ப்பின் அர்த்தம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
 
சிறுபான்மையினர் தங்கள் நோக்கின்படி பள்ளிகளை நிறுவி நடத்த அரசியல் சட்டம் உரிமை அளிக்கிறது; இந்த உரிமையில் பயிற்றுமொழியை அவர்களே முடிவு செய்வதும் அடங்கும்; அது அவர்களுடைய தாய்மொழி யாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த முடியாது என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்து. இதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சொல்லி யிருக்கிறது; இந்த வழக்கிலும் சொல்கிறது. சிறுபான்மை யினருக்குத் தரப்பட்டுள்ள இந்த உரிமைபற்றிய ஷரத்து, அவர்களுக்குத் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் வளர்க்கவும் தரப்பட்டுள்ள உரிமை பற்றிய ஷரத்துக்கு அடுத்துவருகிறது. இந்த இரண்டு உரிமைகளுக் கும் தொடர்பு உண்டு; பின்னது முன்னதற்கு ஒரு கருவி என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
அரசின் அதிகார வரம்பு
 
அரசிடம் பணம் வாங்காமல், மாணவர்களிடம் அதிமாகப் பணம் வசூலித்து நடத்தப்படும் தனியார் பள்ளி களின் பயிற்றுமொழிக் கொள்கைபற்றி அரசு ஆணை யிட முடியாது. ஏனென்றால், கல்வி தருவது அரசியல் சட்டத்தில் தொழில் என்று சொல்வதில் அடங்கும்; லாபத்துக்காகச் செய்தாலும், சேவையாகச் செய்தாலும் அது தொழில்; எந்தத் தொழிலையும் தடை இல்லாமல் செய்ய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உரிமை அளிக் கிறது. பயிற்றுமொழி பற்றிய அரசின் ஆணை தொழில் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். இது உச்ச நீதிமன்றத்தின் வாதம். அரசுக்குத் தொழிலை நெறிப் படுத்தும் அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது; தொழிலாளர் நலம், சுற்றுச்சூழல் நலம் முதலானவற்றைக் காக்க அரசுச் சட்டம் இயற்றி தொழில்செய்வதைக் கட்டுப்படுத்தலாம். அரசின் கட்டுப் படுத்தும் அதிகாரம் வரம்புக்கு மீறக் கூடாது. கல்வியைப் பொறுத்தவரை பள்ளிகளின் தரத்தை, கல்வியின் தரத்தை நிலைநாட்டுவது அரசின் பொறுப்பு. ஆனால், கல்வியின் தரத்தைப் பயிற்றுமொழி பாதிக்காது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. உயர்நிலைக் கல்வியில் ஆங்கிலம் தரத்தைக் கூட்டுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்; தொடக்கக் கல்வியில் தாய்மொழியோ ஆங்கி லமோ தரத்தைக் கூட்டுகிறது என்று சொல்ல முடியாது. அது எதுவாகவும் இருக்கலாம்; அதைத் தேர்ந்தெடுப்பது பெற்றோரின் உரிமை என்பது உச்ச நீதிமன்றத்தின் வாதம்.
 
இது ஆதாரமற்ற வாதம். தாய்மொழிவழிக் கல்வி யின் நன்மைகளைப் பற்றிக் கல்வியாளர்களிடம் ஒருமித்த கருத்து இருக்கிறது. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொள் கிறது. ஆனாலும், இதை உச்ச நீதிமன்றம் உதாசீனப்படுத்து வது கல்வியைத் தொழிலாகப் பார்ப்பதால் என்றே சொல்ல வேண்டும்.
 
சமூக உணர்வில்லாத கல்வி
 
பயிற்றுமொழியைப் பொறுத்தவரை தன்னிடம் நிதியுதவி பெறாத பள்ளிகள் அரசின் கொள்கையைப் பின்பற்றாதபோது அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது அதிகார வரம்பை மீறுவதாகும்; மக்களின் வரிப் பணத்தைக் கொடுக்கும்போதுதான் அரசு நிபந்தனைகள் போடலாம்; இல்லையென்றால் அரசுக்கு அதிகாரம் இல்லை; அரசுப் பள்ளிகளிலும் அரசிடம் நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் தாய்மொழி பயிற்றுமொழியாக இருக்கத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்கிறது. இந்த வாதத்தை மேலெடுத்துச் சென்றால், தனியார் பள்ளிகள் மும்மொழித் திட்டத்தைக் கைவிடுவது அவற்றின் விருப்பம்; மாநிலத்தின் ஆட்சிமொழியைப் படிக் காமல், அரசின் செயல்பாடுகளில் பங்கேற்க முடியாமல், ஜனநாயகத்துக்கு ஊறு விளைந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; இப்பள்ளிகள் மனிதநேய, சமூகவியல், வரலாற்றுப் பாடங்களே பள்ளி மாணவர்களுக்கு வேண்டாம் என்று முடிவுசெய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
 
எது பேச்சுரிமை?
 
பொதுநன்மையை விட தனிநபர் உரிமையே முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டத்தைக் காட்டி வாதிடுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி பிறப் புரிமை என்னும்போது அந்தக் கல்வியை எந்த மொழியில் பெறுவது என்பதற்கும் உரிமை இருக்கிறது என்ற கர்நாடக உயர் நீதிமன்ற முடிவை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், பேச்சுரிமையின் கீழ் பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வரும் என்கி றது உச்ச நீதிமன்றம். பேச்சுரிமையில் கருத்து வெளியி டும் உரிமையோடு கருத்து பெறும் உரிமையும் அடங்கியிருக் கிறது. எந்த மொழியிலும் ஒருவர் கருத்தை வெளியிடலாம்; கருத்தைப் பெறலாம். கல்வி, கருத்தைப் பெறவும் வெளியிடவும் ஒரு சாதனம். அது எந்த மொழியிலும் இருக்கலாம். இதுவே நீதிமன்றத்தின் வாதம்.
 
பேச்சுரிமையைச் சரிவரப் பயன்படுத்தக் கல்வி உதவும்; எனவே கல்விக்கூடங்கள் பேச்சுரிமையை வளர்க்கும் இடங்கள் என்பது உண்மைதான். ஆனால், தொடக்கப் பள்ளியில் தெரியாத மொழியில் கல்வி நடக்கும்போது மாணவர்கள் கருத்து விளக்கம் கேட்க முடியாமல், தங்கள் கருத்தைச் சொல்ல முடியாமல் வாயடைத்துப்போகிறார்கள். இது எப்படிப் பேச்சுரிமை ஆகும்? ஆட்சிமொழியைப் பொறுத்தவரை, எந்த மொழி பேசுபவரும் அரசோடு தொடர்புகொள்ள, அரசின் நன்மைகளைப் பெறத் தங்கள் மொழியில் பேச, எழுத வாய்ப்புக் கேட்பது பேச்சுரிமையின் கீழ், ஜனநாயக நியாயத்தின் கீழ், மனித உரிமையின் கீழ் வரும். கல்வியில் தன் மொழி அல்லாத, தனக்குத் தெரியாத மொழியில் கற்பேன் என்பது எப்படிப் பேச்சுரிமை ஆகும்?
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூகத்தின் பொது நன்மையைக் காப்பதில் அரசுக்கு இருக்கும் கடமையைக் குறைத்து, வணிக நிறுவனங்கள் தரும் சாமான்களை வாங்குவதற்குப் பொதுமக்களுக்கு உள்ள உரிமை கல்வியைப் பெறுவதிலும் உண்டு என்று கல்வியைச் சந்தைப்படுத்தும் போக்குக்குத்தான் துணைசெய்கிறது.
 
- இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தென்னாசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர்

No comments:

Post a Comment