Monday 19 May 2014

நாகை தொகுதியில் அதிமுகவின் ஏற்றமும்; திமுக, இடதுசாரிகளின் வீழ்ச்சியும்





நாகை (தனி) மக்களவைத் தொகுதியை 30 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக கைப்பற்றியுள்ளது. அதேசமயம் இடதுசாரிகள், திமுகவினரின் கோட்டையாக கருதப்பட்ட இந்தத் தொகுதியில் இரண்டு கட்சிகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன.

1952-ம் ஆண்டிலிருந்து நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியாக இருந்து வருகிறது. மீனவர்கள், விவசாயிகள், ஆதிதிராவிட மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட, தனி தொகுதியாக உள்ள இத்தொகுதி, இடதுசாரிகளுக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது.

1952 முதல் 1967 வரையிலான 4 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸýம், 1971 முதல் 1979 (இடைத்தேர்தல் உள்பட) வரை 3 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட்டும், 1980-ல் முதன் முதலாக திமுகவும், 1984-ல் அதிமுகவும், 1989-ல் மீண்டும் இந்திய கம்யூனிஸ்டும், 1991-ல் மீண்டும் காங்கிரஸýம், 1996,1998 தேர்தலில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தத் தொகுதியை கைப்பற்றின.

1999-ல் தொகுதியை கைப்பற்றிய திமுக தொடர்ந்து 15 ஆண்டுகள் தொகுதியை தன் வசம் வைத்திருந்தது. அதனால் இது திமுகவுக்கு சாதகமான தொகுதி என்ற நிலை ஏற்பட்டது.

அதிமுக இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்த சமயங்களில் நாகை மக்களவைத் தொகுதியை அக்கட்சிக்கே விட்டுக் கொடுத்ததால், 1984-க்குப் பிறகு அதிமுகவால் இந்தத் தொகுதியை கைப்பற்ற முடியவில்லை.

பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடரும், அப்போது நாகைத் தொகுதியை சிபிஐ-க்கு பெற்று வென்று விடலாம் என்று அக்கட்சி கருதியது.

ஆனால், இடதுசாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அதிமுக தனித்துப் போட்டியிட்டதுடன், நாகை தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்தது.

இதனால், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து தனித்துப் போட்டியிட முடிவு செய்து, நாகை தொகுதியில் சிபிஐ போட்டியிட்டது.
திமுகவை பொருத்தவரையில், தொகுதியும் தங்களிடம் உள்ளது அத்துடன் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் வாக்கும், இஸ்லாமியர்களின் வாக்கும் தங்களுக்கு சாதகமாக அமையும் அதனால் மீண்டும் நாகையை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்தில், தொகுதி எம்பியாக உள்ள ஏ.கே.எஸ். விஜயனையே மீண்டும் களம் இறக்கியது.

இந்நிலையில், நாகைத் தொகுதியில் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக இடதுசாரிகளின் வாக்கு இருக்கும் என்று அக் கட்சியினர் கூறி வந்தனர். ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 1,06,079 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்து, திமுக, இடதுசாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கின்றனர் இந்தத் தொகுதி வாக்காளர்கள்.

திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன், பதவிக் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை அமல்படுத்தாதது, கட்சிக்காரர்களை முழுமையாக அரவணைத்து செல்லாதது ஆகியவையே திமுகவின் தோல்விக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கடந்த 2009 தேர்தலைவிட தொகுதி வாரியாக திமுக பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது 3,534 (நாகை), 3,158 (கீவளூர்), 20,126 (வேதாரண்யம்), 947 (திருவாரூர்), 4,456 (திருத்துறைப்பூண்டி), 11,218 (நன்னிலம்) என மொத்தம் 43,439 வாக்குகள் 2014 மக்களவைத் தேர்தலில் குறைவாக பெற்றுள்ளதால் திமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதையும் காட்டுகிறது.
இதுபோலவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாகை தொகுதி முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதை தங்களது கோட்டையாக கருதி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது பலம் குறைந்திருப்பதையும் தேர்தல் முடிவில் மூலம் அறிந்து கொண்டனர்.

அதிமுக அரசின் விலையில்லா ஆடு மாடு, தாலிக்குத் தங்கம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை என ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்களால் அதிமுக தொகுதியில் வலிமை பெற்றிருக்கிறது. திமுகவின் வேட்பாளர் தேர்வு, க ட்சி மீதான ஊழல் புகார் ஆகியவை திமுகவுக்கு இறங்கு முகத்தை தந்திருக்கும் அதே வேளையில், மாநில அரசியலில் இடதுசாரிகளின் ஆதிக்கம் குறைந்து வருவதையும் உணர்த்தியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலர் ஆர் காமராஜ் தற்போது தமிழக அமைச்சர் .இவரின் கடுமையான முயற்சியும் முக்கிய பங்கு காரணம் .

No comments:

Post a Comment