Saturday, 5 September 2015

ஒளரங்கசீப் சாலை கலாம் சாலையாக மாற்றம்


தில்லி ஒளரங்கசீப் சாலை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 புது தில்லி நகராட்சிக் கவுன்சில் (என்டிஎம்சி) ஊழியர்கள், வியாழக்கிழமை நள்ளரவில் ஒளரங்சீப் சாலையின் பெயர் பலகைகளில் இருந்த பெயரை அழித்துவிட்டு, டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சாலை என மாற்றும் செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ பொது அறிவிப்பை என்டிஎம்சி வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டது.
 ஒளரங்கசீப் சாலையின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடடுக்கப்பட்ட வழக்கு, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருவதற்கு முன், என்டிஎம்சி இந்த நடவடிக்கையை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
 உயர் நீதிமன்றம் கேள்வி: இதனிடையே, "ஒளரங்கசீப் சாலையின் பெயரை மாற்றும் முடிவை எந்த அடிப்படையில் மேற்கொண்டீர்கள்?' என்று என்டிஎம்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான பொதுநல வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 அப்போது, "ஒளரங்கசீப் சாலையின் பெயரை மாற்றும் முடிவை, நீங்கள் எந்த அடிப்படையில் மேற்கொண்டீர்கள்? என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன?' என்று என்டிஎம்சிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், வரும் 22ஆம் தேதிக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யும்படி, என்டிஎம்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 முன்னதாக, என்டிஎம்சியின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், "ஒளரங்கசீப் சாலைக்கு, நாடு போற்றும் மனிதரான அப்துல் கலாம் பெயர் சூட்டப்படுவது தொடர்பான பொது அறிவிப்பை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இந்த சாலையானது, என்டிஎம்சியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. எனவே, சாலையின் பெயரை மாற்றும் முழுமையான அதிகாரம் என்டிஎம்சிக்கு இருக்கிறது' என்றார்.
 ஷாகித் அலி என்ற வழக்குரைஞர் தொடுத்த அந்த பொது நல வழக்கில், "ஒளரங்கசீப் சாலையின் பெயரை மாற்றும் முடிவு, விதிமுறைகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதிக்கும்' என்று கூறப்பட்டிருந்தது. 
 தில்லி ஒளரங்கசீப் சாலையின் பெயரை அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்ய என்டிஎம்சி, கடந்த மாதம் 28ஆம் தேதி முடிவு செய்தது. இதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

No comments:

Post a Comment