Friday, 18 September 2015

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு

இந்திய விடுதலைக்குப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டுள்ளது. 
சுதந்திர போராட்டத்தின்போது, 1939–ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து மற்றொரு பிரபல தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார்.
நேதாஜி, 1945–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18–ந் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. இந்த விமான விபத்து சம்பவத்துக்கு பின்பு, நேதாஜி முந்தைய சோவியத் ரஷியா நாட்டில் காணப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு. இதனால் நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை அண்மைக்காலம் வரை நீடித்தது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை பற்றிய 100–க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்   1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை வெளியிடப் போவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.  கணினி மயமாக்கப்பட்டு வந்த அந்த ஆவணங்கள் கொல்கத்தாவில் இன்று வெளியிடப்பட்டன. 12,744 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்களை, கொல்கத்தா காவல் ஆணையர் சுரஜித் கர் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கொல்கத்தா காவல் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் திங்கள் கிழமை முதல் பார்க்கலாம் என கூறினார்.

No comments:

Post a Comment