Tuesday 8 September 2015

Thiruvarur - நகராட்சி வார்டு 8 அவல நிலை

திருவாரூர் நகராட்சி8வது வார்டு அவலம் 8 மாதமாக குடிநீர் இல்லை சீரமைக்கப்படாத சாலைகள் குவிந்து கிடக்கும் குப்பைகள் சாலைகளில் ஓடும் கழிவு நீர் மக்களோடு சேர்ந்து புலம்பும்i கவுன்சிலர்

திருவாரூர், :  திருவாரூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் 8வது வார்டில் மலேயா தெரு, புதுமனை தெரு, வடக்கு மற்றும் நடுத் தெரு, கொடிக்கால்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜாகீர்உசேன் இருக்கிறார். இந்த வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புலம்புகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 8 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து நகராட்சி அலுவலர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து எவ்வித பலனும் இல்லை என்றும், நகராட்சியின் சாக்கடைகள் சரிவர சுத்தம் செய்யப்படாததால் நோய்கள் பரவி வருவதாகவும், ஆண்டுக் கணக்கில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றும், நகராட்சி மூலம் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பைகள் அனைத்தும் சாலையில் கொட்டும் நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அடுக்கடுக்காக குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதி என்பதால் நகராட்சி நிர்வாகம் இந்த வார்டை புறக்கணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அந்த வார்டு மலேயாதெருவை சேர்ந்த அமானுல்லா என்பவர் கூறுகையில், மலேயா தெரு உட்பட வார்டு முழுவதும் கடந்த 8 மாதங்களாக நகராட்சி குடிநீர் வரவில்லை. இது குறித்து நகராட்சி அலுவலர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் 5 முறை மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. கொடிக்கால்பாளையம் பகுதியானது சிறுபான்மை இனத்தை சேர்ந்த முஸ்லீம்கள் வசிக்கும் பகுதி என்பதால்நகராட்சி நிர்வாகம் இந்த வார்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மேலும் நகராட்சி மூலம் தெருக்களில் உள்ள குப்பைகள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை. நகராட்சி மூலம் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பைகள் அனைத்தும் சாலையில் கொட்டும் நிலை உள்ளது. எனவே இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதே தெருவை சேர்ந்த ஜாபர்அலி என்பவர் கூறுகையில், இந்த வார்டில் நகராட்சியின் சாக்கடைகள் சரிவர சுத்தம் செய்யப்படாததால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய்கள் பரவி வருகிறது .மேலும் இந்த வார்டில் உள்ள கொடிக்கால்பாளையம் வடக்குத்தெரு, நடுத்தெரு சாலைகள் பல வருடமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள மேனுவல் தொட்டியிலிருந்து கழிவுநீர் அடிக்கடி சாலையில் வெள்ளம்போல் ஓடுவதால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக வீடுகளுக்குள் வசிக்க முடியாத நிலை இருந்து வருகிறது என்றார்.

கொடிக்கால்பாளையம் வடக்குத்தெரு  ஜான்முகமது என்பவர் கூறுகையில், வடக்குத்தெரு சாலை மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் இங்குள்ள சுக்கானாறு வடிவாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு புதர் மண்டி கிடப்பதால் மழை காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதே தெரு முகமதுஅலி என்பவர் கூறுகையில், வார்டில் குடிநீர் பிரச்னை நீண்ட காலமாகவே தீராத பிரச்சனையாக உள்ளது. மேலும் தெருநாய்கள், பன்றிகள் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான ஜாகீர்உசேனிடம் கேட்டபோது, வார்டில் குடிநீர் பிரச்சனை என்பது தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய இங்குள்ள நகராட்சி பூங்காவில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பதற்கு நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணியை மேற்கொள்ளமுடியவில்லை. மேலும் நகராட்சியில் துப்பரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லாததால் தெருக்களில் குப்பைகள் அள்ளுவது, சாக்கடைகள் சுத்தம் செய்வது போன்ற பணிகள் சரிவர நடைபெறுவதில்லை.

குப்பை தொட்டிகளும் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை. மேலும் பாதாள சாக்கடை பணி என்பது தற்போது வரையில் சரிவர முடிவடையாத நிலையில் நகர் முழுவதுமே மேனுவல் தொட்டியிருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் வெள்ளம்போல் ஓடுகிறது. மேலும் இதற்கான பணிகள் முடிவடையாத நிலையில் நகராட்சி மூலம் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவது ஏற்றுக் கொள்ளமுடியாதது. இதனை அனைத்து கூட்டங்களிலும் தெரிவித்துள்ளேன். வார்டில் நடுத்தெரு மற்றும் வடக்குத்தெரு சாலைகள் அண்மையில் போடப்பட்டது தான். ஒப்பந்தகாரர் செய்த பணிகள் சரிவர செய்யப்படாததால் சாலைகள் குறுகிய காலத்திலேயே சேதமடைந்து விட்டது. சுக்கானாறு வடிவாய்க்கால் துார்வாருவதற்கு நகராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment