Wednesday, 30 September 2015

வட்டி விகிதத்தைக் குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் சுமை குறையும்


வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
 இதனால் வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
 இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று அரசு, தொழிலகங்கள் மற்றும் வங்கிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்தது குறிப்பிடத் தக்கது.
 ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
 அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
 ரிசர்வ் வங்கியிடமிருந்து பிற வர்த்தக வங்கிகள் பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) தற்போதைய 7.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
 பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெபோ) 5.75 சதவீதமாக இருக்கும். வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு தற்போதைய 4 சதவீத அளவிலேயே தொடரும்.
 முன்னதாக, 3 நிதிக் கொள்கை அறிவிப்புகளின்போது, தலா கால் சதவீதம் என மொத்தமாக முக்கால் சதவீத அளவு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டதையும் சேர்த்து 1.25 சதவீத வட்டிக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த அறிவிப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் விதமாகப் பிற வங்கிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இப்போதைய வட்டிக் குறைப்பு அறிவிப்புக்கு முன்னதாக 0.75 சதவீத அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டபோதிலும், வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக 0.30 சதவீதம் மட்டுமே வட்டி குறைக்கப்பட்டது.
 ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை செயல்படுத்துவதில் வர்த்தக வங்கிகளுக்கு உள்ள தடைகள் அகற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 மேலும், நிதிப் பற்றாக்குறை அளவைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 கொள்கைகளில் சீர்திருத்தம், உற்பத்தித் திறனை அதிகரிக்கும்படியான தொழிலகங்களின் செயல்பாடுகள் ஆகியவைதான் நீடித்த வளர்ச்சிக்கான அடிப்படை உந்து சக்திகள்.
 இந்த நிலையில், அரை சதவீத வட்டிக் குறைப்பை அறிவித்து ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு எடுத்துள்ளது.
 சர்வதேச நிலவரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், நமது நீடித்த வளர்ச்சியை முன்வைத்து நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
 நமது பொருளாதாரம் நீண்ட நாளாக சில பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. அதனை மாயமாக மறைய வைக்க முடியாது.
 நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய அரசு, ரிசர்வ் வங்கி, பிற கட்டுப்பாட்டு அமைப்புகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
 மேலும், வெளிநாட்டு முதலீடுகளின் வரம்புகள் அமெரிக்க டாலர்களின் அடிப்படையில் இல்லாமல், ரூபாயின் அடிப்படையில் இருக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனவரி மாதத்துக்குள் பணவீக்கம் 6 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அது 5.8 சதவீதமாகக் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழ் நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும். முன்னதாக, அது 7.6 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது என்றார் ரகுராம் ராஜன்.
 நான் கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல!
 வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழிலக அமைப்புகளும் அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அரை சதவீத வட்டிக் குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
 "திடீர் பரிசு வழங்கும் நீங்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவா?' என்று செய்தியாளர்கள் வேடிக்கையாக ரகுராம் ராஜனிடம் கேட்டனர்.
 நான் கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல; என் பெயர் ரகுராம் ராஜன். நான் செய்ய வேண்டியதைச் செய்துள்ளேன்.
 தற்போதைய பொருளாதார நிலையையொட்டி வட்டிக் குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி போனஸ் அல்ல என்றார் அவர்.
 கடனுக்கான வட்டியைக் குறைத்து வங்கிகள் அறிவிப்பு
 ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு அறிவிப்பையடுத்து, ஆந்திர வங்கி அளித்து வரும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அந்த வங்கி அறிவித்தது.
 பாரத ஸ்டேட் வங்கியின் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 0.4 சதவீத அளவுக்குக் குறைப்பதாக அந்த வங்கி தெரிவித்தது.
 இதையடுத்து, அந்த வங்கியின் குறைந்தபட்ச வட்டி விகிதம் 9.3 சதவீதமாக இருக்கும். மேலும், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படும் எனவும் அந்த வங்கி தெரிவித்தது.
 தொழிலக அமைப்புகள் வரவேற்பு
 வட்டி விகிதத்தைக் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது, வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று பல்வேறு தொழிலக அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
 இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைமை இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறுகையில், நமது பொருளாதார நிலையில் அடிப்படையாக உள்ள அடிப்படையான குறையை ரிசர்வ் வங்கி உணர்ந்து, வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
 முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் மீண்டும் புத்துணர்வு பெறும் விதமாக தொழிலகங்கள் செயல்படும் என்றார்.
 கடந்த ஜனவரியிலிருந்து மொத்தம் 1.25 சதவீத அளவு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்று இந்திய வர்த்தக சபைகளின் சங்கத்தின் (அசோசேம்) தலைமை இயக்குநர் டி.எஸ்.ராவத் கூறினார்.
 ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஆட்டோ மொபைல் துறைக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய தீபாவளிப் பரிசு என்று ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
 ஏற்றுமதிகள் குறைந்து வரும் நிலையில், அனைத்துப் பிரிவு ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்புச் சலுகையாக, குறைந்தபட்சம் இரண்டு சதவீத வட்டி விதிப்பை ஒத்திவைக்க வேண்டும். நிலைமை சீராகும்போது, அதனைச் சேர்த்து அளிக்கும்படி அறிவிக்கலாம் என்று ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment