சவுதி அரேபியாவின் மெக்கா பெரிய மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் பலியாகினர். 238 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறைவாகவே இருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
2 இந்தியர்கள் பலி:
இந்த விபத்தில் இரண்டு இந்தியர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டது. வெளியுறவு அமைச்சகம் இதனை உறுதி செய்துள்ளத்யு, 15 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கூறியதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, "மெக்கா விபத்தில் 9 இந்தியர்கள் காயமடைந்தது தெரியவந்துள்ளது. இன்னும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இந்திய மருத்துவர்கள் மெக்காவுக்கு விரைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடைசியாக பெறப்பட்ட தகவலின்படி 2 இந்தியர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெல்ப்லைன் எண்கள்:
இந்திய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்கள்
00966125458000
00966125496000
சவுதியில் உள்ள புனித யாத்திரிகர்கள் தொடர்புகொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்: 8002477786
மசூதி விரிவாக்கம்:
மெக்காவில் புனித யாத்திரிகர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கடந்த 2006-ம் ஆண்டு பெரும் விபத்து ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து மெக்காவில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் புனித யாத்திரிகர்களின் எண்ணிக்கையை சவுதி அரசு கண்காணிக்கத் தொடங்கியது. மேலும், எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் தொடங்கியது. இருப்பினும், மெக்கா செல்லும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. யாத்திரிகர்களை சமாளிக்க கூடுதல் வசதிகளை செய்ய வசதியாக மெக்காவில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரே நேரத்தில் 22 லட்சம் பேர் கூடும் வகையில், பெரிய மசூதியை 4 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு விரிவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று திடீரென அறுந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விபத்து நடந்தது எப்படி?
விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து மெக்கா மசூதியின் நிர்வாகத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "பெரிய மசூதியின் மையத்தில் கருப்பு நிறத்திலான காபா எனப்படும் கனசதுர வடிவிலான வழிபாட்டு கட்டமைப்பு இருக்கிறது. அதனைச் சுற்றி லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு தொழுகை நடத்துவர். அந்த கட்டமைப்பு மீது ராட்சத கிரேன் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்துள்ளது" என்றார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை:
சவுதி அரேபியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சுலைமான் அல் அமீர் கூறும்போது, "விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துப் பகுதியில் இருந்து சடலங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்:
மெக்கா மசூதி விபத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி, "மெக்காவில் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஹமீது அன்சாரி வருத்தம்:
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மெக்கா விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தையை உரித்தாக்குவதாக ஹமீது அன்சாரி குறிப்பிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி இரங்கல்:
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெக்கா விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரேன் விழுந்த வீடியோ பதிவு
No comments:
Post a Comment