Friday, 4 September 2015

திருவாரூர் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வுக்கு பிறது அது வெறும் புரளி என தெரிய வந்தது.
சென்னையில் உள்ள 108 இலவச அவசர ஊர்தி சேவைக் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை பிற்பகல் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், திருவாரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறினார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் 2 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடத்தினர். இதில் அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட செல்லிடப் பேசி எண் நீடாமங்கலம் அருகே உள்ள கீழ்ப்பாடியைச் சேர்ந்தவருடையது என்பதை கண்டறிந்தனர். பின்னர், நேரடியாக அங்கு சென்று செல்லிடப்பேசி வாங்க பயன்படுத்தப்பட்ட முகவரியில் இருந்த தந்தை, மகன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment