திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை முதல் வாக்குச்சாவடி மையத்திலேயே மேற்கொள்ளலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாரூர், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் பார்வைக்கு வைக்கப்படும்.தவிர, செப். 19, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
வரும் ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை படிவம் 6ஐ இந்த அலுவலகங்களில் நிரப்பிக் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8, தொகுதிக்குள் இடம் மாற்றத்துக்கு படிவம் 8ஏ, இறந்தவரின் பெயரை நீக்க படிவம் 7 ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
இந்தப் பணி வரும் செப். 15 முதல் அக். 14 வரை நடைபெறும். மேலும், செப். 20 மற்றும் அக்டோபர் 4 ஆகிய இரு நாள்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இவற்றிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம். இணையதளத்திலும் இதே திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment