Thursday, 17 September 2015

உலக சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு 293-ஆவது இடம்


உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
 இந்த தரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கல்வி நிறுவனங்களில், மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
 உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இதுவரை இடம்பெறாமல் இருந்து வந்தன. 
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 2015-ஆம் ஆண்டுக்கான "க்யூ.எஸ்.' உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இரண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.
 பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 147-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 179-ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன. இதற்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்பட்டன.
 இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து மும்பை ஐஐடி 202-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 254-ஆவது இடத்தையும், கான்பூர் ஐஐடி 271-ஆவது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 286-ஆவது இடத்தையும், ரூர்கி ஐஐடி 391-ஆவது இடத்தையும், குவாஹாட்டி ஐஐடி 451-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
 இதுபோல் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் அடிப்படையில் "க்யூ. எஸ்'. வெளியிட்டுள்ள உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகமும் இடம்பிடித்து அசத்தியிருக்கிறது.
 இந்தப் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பட்டியலில் உலக அளவில் 44-ஆவது இடத்தை தில்லி ஐஐடி பிடித்துள்ளது.
 அதனைத் தொடர்ந்து மும்பை ஐஐடி 52-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 72-ஆவது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 90-ஆவது இடத்தையும், கான்பூர் ஐஐடி 95-ஆவது இடத்தையும், ரூர்கி ஐஐடி 137-ஆவது இடத்தையும், தில்லி பல்கலைக்கழகம் 268-ஆவது இடத்தையும், குவாஹாட்டி ஐஐடி 284-ஆவது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறியதாவது:
 உலக தலைசிறந்த பொறியியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தைப் பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது.
 அதிலும், உலக அளவில் மெக்கானிக்கல், ஏரோநாட்டிகல், உற்பத்தி பொறியியல் பிரிவுகளின் கீழ் க்யூ.எஸ். வெளியிட்டுள்ள உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.
 இந்தப் பட்டியலில் குவாஹாட்டி ஐஐடி, ரூர்கி ஐஐடி ஆகியவை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பிறகே வருகின்றன.
 இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே இந்தியப் பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம்தான். இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் நிர்வாகிகளின் தீவிர முயற்சியே காரணம்.
 இது புதிய உத்வேகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அளித்துள்ளது. அடுத்ததாக 200 இடத்துக்குள் வருவதற்கான முயற்சியை பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் என்றார்.

No comments:

Post a Comment