Saturday, 26 September 2015

மெக்கா நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு


மெக்கா அருகே மினாவில் வியாழக்கிழமை நேரிட்ட நெரிசலில் சிக்கி 719 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 
முன்னதாக, இந்த நெரிசலில் சிக்கி 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் கூறியுள்ளதாவது:
நெரிசலில் 14 இந்தியர்கள் உயிரிழந்ததாக, மெக்காவில் உள்ள இந்தியத் தூதர் தெரிவித்தார். மேலும், 13 இந்தியர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் அதிகாரிகள் அறிவித்த பிறகே, உண்மையான எண்ணிக்கை தெரியவரும் என்று அந்தப் பதிவில் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் புனித இடமான மெக்காவுக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம்களின் கடமையாகும். மெக்கா மசூதியில் தொழுகை நடத்திய பிறகு, மினா சென்று சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கலந்து கொள்வது வழக்கம். அந்த இடத்துக்கு மக்கள் செல்லும் போது வியாழக்கிழமை நெரிசல் ஏற்பட்டது. அதில், 719 பேர் உயிரிழந்தனர்; 863 பேர் காயமடைந்தனர். சம்பவப் பகுதியில் சவூதி அரேபிய அரசு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இனிவரும் காலங்களில் மெக்காவுக்கு வருகை தரும் பயணிகள் எளிதாக சடங்குகளை மேற்கொள்ளும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மூவர்
சென்னை, செப். 25: மெக்கா அருகே மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று தமிழர்கள் உயிரிழந்ததாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வாயிலாக மெக்கா புனித யாத்திரையை மேற்கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் - மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராஹிம், நெல்லை மாவட்டம் - தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை, திருச்சியைச் சேர்ந்த ரெமிஜன் ஆகியோர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தச் செய்தியை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment