Friday, 4 September 2015

இரா.சம்பந்தன், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் 32 ஆண்டுகளுக்கு பின் தமிழர் கட்சிக்கு கவுரவம்














இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல்இலங்கை பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 17–ந்தேதி நடந்தது. இதில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி, பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தலில் 2–ம் இடத்துக்கு தள்ளப்பட்ட இலங்கை சுதந்திர கட்சியும், ரனில் பிரதமராவதற்கு ஆதரவு அளித்தது.
தேசிய கூட்டு அரசுஇதைத்தொடர்ந்து பிரதான இரு கட்சிகளும் இணைந்து இலங்கையில் தேசிய கூட்டு அரசு அமைத்து உள்ளன. அதன்படி ரனில் விக்ரமசிங்கே 4–வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த தேர்தலில் ‘இலங்கை தமிழ் அரசு கட்சியின்’ சின்னத்தில் போட்டியிட்ட, தமிழ் தேசிய கூட்டமைப்பு, 16 இடங்களில் வெற்றி பெற்று 3–வது இடத்தை பிடித்தது. கூட்டமைப்பின் தலைவரும், தமிழர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான இரா.சம்பந்தன் திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகர் அறிவிப்புபாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியும், இலங்கை சுதந்திர கட்சியும் சேர்ந்தே அரசு அமைத்துள்ளதால், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்கப்பட்டு உள்ளது. இதை சபாநாயகர் கரு ஜெயசூரியா நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அமிர்தலிங்கம்இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி உரிமை கோராததால், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பதை இந்த சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற தமிழர் கட்சி முதன் முதலாக (கடந்த 1977 முதல் 1983 வரை) எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றிருந்தது. அப்போது கூட்டணி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.
தமிழர்கள் மகிழ்ச்சிஅதன் பிறகு கடந்த 32 ஆண்டுகளில் ஒருபோதும் தமிழர்களின் கட்சி இந்த அந்தஸ்தை பெறாத நிலையில், தற்போது இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது தமிழர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் தமிழர்களின் உரிமைகள் கிடைக்க வழி ஏற்படும் என நம்பப்படுகிறது. தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கும் என இரா.சம்பந்தன் சமீபத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண முதல்வர் வரவேற்புஇலங்கை கிழக்கு மாகாண முதல்வரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான நசீர் அகமது நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ஆகியோரின் புதிய நல்லாட்சியில் எதிர்க்கட்சி தலைவராக சிறுபான்மை இனத்தை சேர்ந்த இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த நல்லாட்சியை சிறப்பாக கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.
1977–ம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இலங்கைப் பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறுபான்மை இனத்தவர்களுக்கு பெருமை சேர்த்தார். அதேபோன்று, 38 ஆண்டு காலத்துக்கு பிறகு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இனப்பிரச்சினை தீர்வில் இரா.சம்மந்தன் போன்றவர்களின் கருத்துகளும், முஸ்லிம் தலைவர்களின் கருத்துகளும் உள் வாங்கப்பட்டு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஆங்கில, தமிழ் மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இரா.சம்மந்தன் சிங்கள மொழியிலும் நன்கு பரீச்சயம் பெற்றவர். ஆழமான அரசியல் அறிவைக்கொண்ட அவர் சிறந்த பேச்சாளரும் கூட. பாராளுமன்றத்தில் அவர் வாதிடும் திறமை அலாதியானது.
கிழக்கு மாகாணத்தில் பிறந்த இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானது, கிழக்கு மண்ணுக்கு பெருமை தருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
.

No comments:

Post a Comment