மினா
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஹஜ் புனித பயணமும் ஒன்று ஆகும்.
20 லட்சம் பேர் புனித பயணம் இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த ஆண்டில் 1½ லட்சம் இந்தியர்கள் உள்பட 20 லட்சத்துக்கும் அதிகமாக அங்கு ஹஜ் பயணம் சென்று உள்ளனர்.
கடந்த 11-ந் தேதி அங்குள்ள பெரிய மசூதியில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் 11 இந்தியர்கள் உள்பட 115 பேர் பலி ஆனார்கள். மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்தனர்.
கல்லெறியும் நிகழ்ச்சிஅந்த சோக சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் அங்குள்ள மினா நகரில் மற்றொரு விபத்து சம்பவம் நடைபெற்று ஏராளமான பேர் உயிர் இழந்து உள்ளனர்.
மெக்காவுக்கு அருகே உள்ளது மினா நகரம். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் இறுதி நிகழ்ச்சியாக மினாவுக்கு சென்று அங்குள்ள சாத்தான் தூண் மீது கல் எறிவார்கள். நேற்று அங்கு கல் எறியும் நிகழ்ச்சி நடைபெற்ற போது திடீரென்று நெரிசல் ஏற்பட்டது. சாத்தான் தூணை நோக்கி செல்லும் பாதையில் 204-வது தெருவின் அருகே ஜமாரட் பாலத்தின் நுழைவுப்பகுதியில் இந்த நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
நெரிசலில் சிக்கி 717 பேர் பலிஇந்த சம்பவத்தில் 717 பேர் பலி ஆனார்கள். மேலும் 800-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. காயம் அடைந்தவர்களில் பலர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சவுதி அரேபிய போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 ஆயிரம் பேர் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவ குழுவினருடன் 220 ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன.
மீட்புக்குழுவினர் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டதோடு, காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வேன்களில் ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் உடனடியாக மூடப்பட்டன.
இந்தியர்கள் 3 பேர்நெரிசலில் சிக்கி இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள் என தெரியவந்து உள்ளது. அவர்களில் ஒருவர் பெயர் பிபி ஜான் (வயது 60). இவர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். மற்றொருவரின் பெயர் முகமது. இவர் கேரள மாநிலம் கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை.
காயம் அடைந்து சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பவர்களில் இருவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியா, மலேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைமினாவில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது நெரிசல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவது இது முதல் தடவை அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற விபத்துகள் நடந்து உள்ளன.
கடந்த 25 ஆண்டுகளில் ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட 2-வது மோசமான விபத்து இது ஆகும். 1990-ம் ஆண்டு ஜூலை மாதம் மெக்கா அருகே உள்ள அல்-முசீம் குகைப்பாதையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1,426 யாத்ரீகர்கள் உயிர் இழந்தனர். அதன்பிறகு இப்போது மினாவில் நடந்த நெரிசலில் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு உள்ளது.
ஹஜ் புனித பயணமாக லட்சக்கணக்கான பேர் மெக்கா வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சவுதி அரேபியா அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஹஜ் பயணிகளின் நலனை கருதி ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. என்றாலும் சில சமயங்களில் இதுபோன்று அசம்பாவிதங்கள் நடைபெற்று விடுகின்றன.
ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர்இந்த விபத்து சம்பவம் பற்றி இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் அபுபக்கர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் மினா நகர் உள்ளது. அந்த மினா நகரில் ஜமாரட் பாலம் அருகே சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி நேற்று இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி 717 ஹாஜிகள் இறந்து உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேஷியா மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இந்த சம்பவத்தில் 800-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அங்கு உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளது. மேலும் அந்த அரசு துரித நடவடிக்கை எடுத்து மேலும் நெரிசல் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் எடுத்து இருக்கிறது.
ஆழ்ந்த அனுதாபம்சம்பவம் நடந்த ஜமாரட் பாலம் கட்டப்பட்டு 14 வருடங்கள் ஆகின்றன. இந்த பாலம் கட்டப்பட்டு இதுவரை இப்படி சோக சம்பவம் நடந்தது இல்லை. ஏன் இப்படி நெரிசல் ஏற்பட்டது? எப்படி இந்த விபத்து நடந்தது? என்று தெரியவில்லை.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய ஹஜ் கமிட்டி சார்பிலும், ஒட்டுமொத்த இந்திய மக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்துடன் இரங்கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் 115 பேர் இறந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், அங்கு மீண்டும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
பக்ரீத் பண்டிகையை புதிய ஆடை உடுத்தி கொண்டாடிய நிலையில், இப்படி துயர சம்பவம் நடந்ததால் ஏராளமானவர்கள் புதிய ஆடைகளை களைந்துவிட்டு பழைய ஆடைகளை கட்டிக்கொண்டார்கள்.
இந்த விபத்து குறித்து ஏதாவது தகவல் அறிய விரும்புவோர் 044-28276061 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அபுபக்கர் கூறினார்.
ஹஜ் புனித பயணத்தின் போது இதுவரை நடந்த விபத்துகள் ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்கனவே பல முறை விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
*1975-ம் ஆண்டு டிசம்பர்: ஹஜ் பயணிகள் தங்கி இருந்த கூடாரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் 200-க்கும் அதிகமானோர் பலி.
*1987-ம் ஆண்டு ஜூலை: ஈரானிய போராட்டக்காரர்களுக்கும் சவுதி அரேபிய போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 400-க்கும் அதிகமாக ஈரானிய யாத்ரீகர்கள் பலி.
*1990-ம் ஆண்டு ஜூலை: மெக்கா அருகே உள்ள அல்-முசீம் குகைப்பாதையில் நடந்த விபத்தில் 1,426 யாத்ரீகர்கள் உயிர் இழந்தனர்.
*1994-ம் ஆண்டு மே: மினாவில் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது ஜமாரத் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 270 யாத்ரீகர்கள் பலி.
*1997-ம் ஆண்டு ஏப்ரல்: மினாவில் ஹஜ் பயணிகள் தங்கி இருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 343 யாத்ரீகர்கள் சாவு.
*1998-ம் ஆண்டு ஏப்ரல்: நெரிசலில் சிக்கி 119 பேர் பலி.
*2004-ம் ஆண்டு பிப்ரவரி: ஜமாரத் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் இறந்தனர்.
*2006-ம் ஆண்டு ஜனவரி: ஜமாரத் பாலத்தின் கிழக்கு நுழைவாயில் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 362 பேர் சாவு.
*2015 செப்டம்பர் 11-ந்தேதி: மெக்கா பெரிய மசூதியில் கிரேன் சரிந்து விழுந்ததில் 115 பேர் பலி.