தமிழகத்தில் புதியதாக 16 வட்டங்கள் ரூ.16 கோடியில் உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் மொத்த வட்டங்கள் 285 ஆக உயர்கின்றன.
இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், "நடப்பு ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டத்தைப் பிரித்து கீழ்ப் பென்னாத்தூரில் புதிய வட்டமும்; விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மற்றும் திருக்கோவிலூர் வட்டங்களைப் பிரித்து முறையே மேல்மலையனூர் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய புதிய இரு வட்டங்களும்; கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் வட்டத்தைப் பிரித்து சூளகிரியில் ஒரு புதிய வட்டமும்; தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, அரூர் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து காரிமங்கலத்தில் ஒரு புதிய வட்டமும்;
தருமபுரி வட்டத்தைப் பிரித்து நல்லம்பள்ளியில் ஒரு புதிய வட்டமும்; சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் வட்டத்தைப் பிரித்து காடையாம்பட்டியில் ஒரு புதிய வட்டமும்; காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய வட்டங்களை சீரமைத்து பல்லாவரத்தில் ஒரு புதிய வட்டமும்; வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் குடியாத்தம் வட்டங்களைப் பிரித்து முறையே நெமிலி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இரு புதிய வட்டங்களும்;
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இரு வட்டங்களைப் பிரித்து முறையே மானூர் மற்றும் சேரன்மகாதேவி ஆகிய இரு புதிய வட்டங்களும்; நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டத்தைப் பிரித்து கொமாரபாளையத்தில் ஒரு புதிய வட்டமும்; ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வட்டத்தைப் பிரித்து தாளவாடியில் ஒரு புதிய வட்டமும்; ஈரோடு வட்டத்தினைப் பிரித்து கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய புதிய இரு வட்டங்களும் என மொத்தம் 16 புதிய வட்டங்கள் 16 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 269 வட்டங்களின் எண்ணிக்கை 285 வட்டங்களாக அதிகரிக்கும்.
4 புதிய வருவாய் கோட்டங்கள்:
இதே போன்று, கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு புதிய வருவாய் கோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. சென்னை மாவட்டத்தில் வருவாய் கோட்டங்கள் எதுவும் இல்லை.
எனவே, நடப்பாண்டில் சென்னை மாவட்டத்தில் எழும்பூர் மற்றும் தண்டையார்பேட்டை என்ற இரு புதிய வருவாய் கோட்டங்கள். மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கோட்டத்தினைப் பிரித்து மேலூரில் ஒரு புதிய வருவாய் கோட்டம். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர் கோட்டத்தைப் பிரித்து கோயம்புத்தூர் (வடக்கு) என்ற ஒரு புதிய வருவாய் கோட்டம். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கோட்டத்தைப் பிரித்து சாத்தூரில் ஒரு புதிய வருவாய் கோட்டம் என மொத்தம் 5 வருவாய் கோட்டங்கள் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் வருவாய்க் கோட்டங்களின் எண்ணிக்கை 80-லிருந்து 85-ஆக உயரும்.
மொத்தம் 17 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தவிருக்கும் மேற்கண்ட அறிவிப்புகளின் மூலம், பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினரின் சேவை விரைந்து கிடைக்கவும், வருவாய்த் துறையினர் தங்கள் சேவையை எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு ஆற்றவும் வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.