Wednesday, 27 August 2014

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த விவசாயிகள் (படங்கள்

 
 
 
திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தின் கேட்டை உடைத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் உள்ளே சென்றதால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
 
விவசாயிகளை பாதிக்கக்கூடிய புதிய காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பயிர் காப்பீட்டு திட்டமே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விளமல் கல்பாலம்  இருந்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தனர்.
 
அப்போது, காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து விவசாயிகளை தடுத்தனர். இதையடுத்து, முழக்கமிட்ட விவசாயிகள் திடீரென தடுப்பு கம்பிகளை அகற்றிவிட்டு, கேட்டை உடைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். இதனால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஒரே சமயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளே சென்றதால் கலெக்டர் அலுவலகத்தில் 3 மணி நேரம் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
 
பின்னர் கலெக்டரை சந்தித்து பேசிய விவசாயிகள், பழைய பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு 128 ரூபாய் பிரிமியம் செலுத்தினால் 12,600 ரூபாய் கிடைக்கும். ஆனால் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி 333 ரூபாய் பிரிமியம் செலுத்தியாக வேண்டும். அப்படி செலுத்தினாலும் ஒரு ஏக்கருக்கு 2,560 ரூபாய் மட்டுமே இழப்பீடாக கிடைக்கும். இது விவசாயிகளை வஞ்சிக்கக் கூடியது.
 
2012ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்தது. பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்தாண்டுக்கான கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தாண்டுக்கு ஏக்கருக்கு 19,500 ரூபாய் பயிர் கடனாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தினர்.
 
இதைத் தொடர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற கலெக்டர், இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததின் பேரில், விவசாயிகள் கலைந்து சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தின் கேட்டை உடைத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளே சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment