Tuesday, 12 August 2014

எம்.பி.பி.எஸ். படிப்பு : 17 வயது பூர்த்தியாக ஒரு நாள் குறைவாக இருந்ததால் விண்ணப்பம் நிராகரிப்பு


2014-15-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு, வயது குறைவு காரணமாக 46 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என தேர்வுக் குழுச் செயலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வயது பூர்த்தி அடைய ஒரு நாள் இருந்த மாணவர்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவைச் சேர்ந்த டி.தங்கராசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகன் பெயர் டி.ராமானுஜம். கடந்த பிளஸ் 2 தேர்வில் எனது மகன் 1101 மதிப்பெண் பெற்றார்.

மேலும், 194.50 கட் ஆஃப் மதிப்பெண்ணை அவர் பெற்றிருந்தார். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்காக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக் குழுவுக்கு விண்ணப்பித்தார். ஆனால், தாற்காலிக தகுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து தேர்வுக் குழுவிடம் கேட்ட போது, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் அவருக்கு 17 வயது பூர்த்தியாகாததால், அவருக்கு எம்.பி.பி.எஸ். இடம் வழங்க முடியாது எனத் தெரிவித்தனர்.
17 வயது நிறைவடைய எனது மகனுக்கு 27 நாள்கள் குறைவாக உள்ளன. எனவே, மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான வயது வரம்பைத் தளர்த்தி எனது மகனுக்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் பி.சஞ்சய் காந்தி ஆஜராகி, தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி. சுகுமார் சார்பில் அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் விவரம்:

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அதில், விண்ணப்பிக்கும் மாணவர்களின் வயது, 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி, எம்.பி.பி.எஸ். சேர்க்கை நடைபெறும் கல்வியாண்டின் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் 17 வயது பூர்த்தியாக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மனுதாரர் மகன் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரத் தகுதியில்லாதவர்.

மேலும், 2014-15-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த 46 பேரின் விண்ணப்பங்கள் தகுதியில்லாதவை. அதில் மனுதாரர் மகனின் விண்ணப்பமும் ஒன்று. இதில், 17 வயது பூர்த்தியாக ஒரு நாள், இரண்டு நாள், நான்கு நாள் மற்றும் ஆறு நாள்கள் குறைவாக இருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எந்தவொரு இடமும் காலியாக இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment