Thursday, 14 August 2014

கசப்பின் முடிவில் தொடங்கும் இனிப்பு

பயறு வகையைச் சேர்ந்த மஞ்சள் நிற வெந்தயத்தைக் கொஞ்சம் நெருக்கமாக ஆராய்ந்தால், அதில் ஆழ்ந்து கிடக்கும் அற்புதங்கள் புரியும். Trigonella foenum-graecu என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்தத் தாவரம், பண்டைக் காலம் முதலே பயிர் செய்யப்பட்டு வந்த ஒன்று.
இதன் தாயகம் தென்கிழக்கு ஐரோப்பாவும் மேற்கு ஆசியாவும். இப்போது இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. நமது நாட்டின் பல்வேறு உள்ளூர் சமையல் முறைகளில் இதன் கீரையும் விதைகளும் முக்கிய உட்பொருளாக உள்ளன.
 
நிறைந்துள்ள சத்துகள்
தனித்தன்மை கொண்ட, சற்றே கசப்புச் சுவையுடைய வெந்தயம் உலகளாவிய சமையல் முறைகளில் பிரபலமற்ற ஒரு மசாலாப் பொருளாக இருக்கலாம். ஆனால், மருத்துவ ரீதியில் அதன் பண்புகள் கேள்விக்கு உட்படுத்த முடியாதவை. வெந்தயக் கீரையும் அதன் விதைகளும் மருத்துவ ரீதியில் பெரும் மதிப்புடையவை.
இதற்குக் காரணம் அதிலுள்ள தயமின், ஃபோலிக் அமிலம், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற பைட்டோசத்துகளும், வைட்டமின் ஏ, பி6, சி-யும் அடங்கியவை. அதன் கீரையில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலெனியம், துத்தநாகம், மாங்கனீசு ஆகிய கனிமச் சத்துகளும் நிறைந்திருக்கின்றன.
 
சர்க்கரைக்கு மருந்து
இன்சுலின் சாராத நிலையில் உள்ள நீரிழிவு நோயாளிகள் அரை தேக்கரண்டி வெந்தயத்தை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, காலையில் முதல் வேலையாக அதை அப்படியே உட்கொள்வது நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், குறைக்கவும் உதவும் பிரபலமான கைவைத்தியம்.
இன்சுலின் சாராத நிலையில் உள்ள நீரிழிவு நோயாளிகள் அரை தேக்கரண்டி வெந்தயத்தை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, காலையில் முதல் வேலையாக அதை அப்படியே உட்கொள்வது நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், குறைக்கவும் உதவும் பிரபலமான கைவைத்தியம்.
இப்போதுவரை 4 ஹைட்ரோ ஐசோலூசின் (4 HO-ILE) என்ற வித்தியாசமான அமினோ அமிலம் வெந்தயத்தில் மட்டுமே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஹைபர்கிளைசீமியா (ரத்தச் சர்க்கரை அதிகரிப்பு) இருப்பவர் களுக்கு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது வெந்தயம். ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்) அறிக்கை ஒன்று கூறுவதன்படி, ஒரு நாளைக்கு 25-100 கிராம்வரை வெந்தயத்தை எடுத்துக்கொண்டால் ஹைபர்கிளைசீமியா தடுக்கப்படும். அத்துடன் குளுகோஸ் சீரம் கொலஸ்ட்ரால், டிரைகிளசரைட்ஸையும் குறைக்கும்.
 
பெண்களும் வெந்தயமும்
வெந்தய விதைகள் தண்ணீரை உறிஞ்சி பெருக்கும்தன்மை கொண்டுள்ளதால் நெஞ்செரிச்சல், வயிறு-குடல் அழற்சி போன்றவற்றைத் தணிக்கும். வயிறு, குடல் பகுதிக்கு உதவும் வகையில் வெந்தயம் ஒரு படலத்தை உருவாக்குகிறது. இந்தப் பண்பு, அல்சரைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. ஸ்டீராய்டு சபோனினை வெந்தயம் கட்டுப்படுத்துவதால் கொழுப்பு உணவுகளில் இருந்து கொலஸ்ட்ரால் கிரகிப்பை வெந்தயம் குறைக்கிறது.
உண்மையில் வெந்தயம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான உட்பொருள்: பூப்படையும் முன் இளம் பெண்களிடம் ரத்த சோகையைத் தடுக்க வெந்தயக் கீரையைத் தருவது உண்டு. வெந்தய விதை பால் சுரப்பை அதிகரிக்கவும், குழந்தை பிறந்த பின் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்தவும் உதவும். சில சமூகங்களில் வெந்தய அல்வா தரப்படுவது இதனால்தான்.
 
நச்சுநீக்கி
அழகுப் பராமரிப்பிலும் வெந்தயம் பயன் தருகிறது, குறிப்பாகக் கூந்தலையும் தோலையும் பராமரிக்கிறது. வெந்தயக் கீரையைத் தலையில் தடவிவந்தால் கூந்தல் நீளமாக வளரும், இளநரையைத் தடுக்கும். இரவில் அரைத்து முகத்தில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் தோலைத் தூய்மைப்படுத்தி, சுருக்கங்களைக் குறைக்கும். ஊற வைத்த வெந்தய விதையை அரைத்துத் தலையில் தடவினால் பொடுகு, பூஞ்சை, பாக்டீரிய தொற்றைக் குறைக்கும்.
வெந்தயம் மிகவும் சக்தி வாய்ந்த நச்சுநீக்கி. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மொத்த உடலையும் தூய்மைப்படுத்தும், வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும். நல்ல பலன்களைப் பெற வெந்தய டீ அருந்தலாம். இதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தய விதையை, ஒரு கோப்பை சுடுதண்ணீரில் போட்டு குடிக்க வேண்டும். சுவைக்குத் தேவைப்பட்டால் தேன் சேர்க்கலாம். அழற்சி அடைந்த வயிறு, குடலுக்கு இது இதமளிக்கும். வயிறு, மலங்கழித்தல், சிறுநீரகத்தைத் தூய்மைப்படுத்தும். சுவாசப் பாதையில் சளியைக் குறைக்கும்.
 
உணவில்
சமையலில் பயன்படுத்தும்போது வெந்தயத்தைச் சற்றே வறுப்பது அதன் கசப்புச் சுவையைக் குறைத்து, நறுமணத்தையும், சுவை உணர்வையும் கூட்டும். குறிப்பாக, ஊறுகாயிலும் குழம்பிலும் இது சேர்க்கப்படுகிறது. வெந்தயக் கீரையை நேரடியாகவும், காய வைத்தும் பயன்படுத்தலாம். வடை, பக்கோடா, சப்பாத்தியிலும் கீரையைச் சேர்க்கலாம்.
சுவை, ஆரோக்கியம், அழகுப் பராமரிப்பு என அனைத்து வகைகளிலும் அசத்தும் இந்தப் பயறைப் பற்றி, வேறென்னச் சொல்ல வேண்டும்? இத்தனைக்குப் பிறகும் இந்தக் கசப்பு மருந்தை உட்கொள்வதால், இனிப்பான பலன்கள் கிடைக் கின்றன எனும்போது எதற்காக இதைத் தவிர்க்க வேண்டும்?

No comments:

Post a Comment