Wednesday 13 August 2014

ஈவ்டீசிங்: திருவாரூர் ரயில் நிலைய ஊழியர் உள்பட 3 பேர் கைது


ரயிலில் பயணம் செய்த மாணவிகளிடம் ஈவ்டீசிங் செய்தது தொடர்பாக திருவாரூர் ரயில் நிலைய ஊழியர் உள்பட 3 பேரை ரயில்வே போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், அதனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (17). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் மெரைன் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மாலை இவரும், சக மாணவிகள் சிலரும் கல்லூரி முடிந்து நாகையிலிருந்து நீடாமங்கலம் செல்வதற்காக காரைக்கால்- எர்ணாகுளம் ரயிலில் வந்தனர்.

அப்போது, அதே பெட்டியில் திருவாரூர் ரயில் நிலைய ஊழியரான அருண்ராஜ் (26), பண்டாரவாடை கேட்கீப்பராகப் பணிபுரியும் தஞ்சாவூர் குமாரவேல் மகன் பிரபாகரன் (26), பாய்ண்ட் மேனாகப் பணியாற்றும் தஞ்சாவூர் தர்மராஜன் மகன் பிரபு (30) ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரபாகரன், பிரபு, அருண்ராஜ் ஆகிய மூவரும், சுரேஷுடன் பயணம் செய்த மாணவிகளிடம் ஈவ்டீசிங்கில் ஈடுபட்டனராம்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை சுரேஷ் தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து, அந்த மூவரும் சுரேஷை தாக்கினராம்.

இதில் காயமடைந்த சுரேஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர், திருவாரூர் ரயில்நிலைய போலீஸில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உதவி ஆய்வாளர் பா. செந்தாமரை, பிரபாகரன், பிரபு, அருண்ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment