Saturday, 16 August 2014

திருவாரூரில் நடைபெற்ற சுதந்திர தின விழா

திருவாரூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மதிவாணன் வழங்கினார்


Share

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ரூ. 1½ கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மதிவாணன் வழங்கினார்.
சுதந்திர தின விழாதிருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 68–வது சுதந்திர தினவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உலக சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை பறக்கவிட்டார். அதன்பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்பு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 35 போலீசாருக்கும், 160 அரசு பணியாளர் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 68–வது சுதந்திர தினத்தையொட்டி 68 மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் கலெக்டர் மதிவாணன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் வருவாய்த்துறையின் மூலம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 112 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் விபத்து நிவாரண உதவித்தொகை ரூ.1 கோடியே 1 லட்சத்து 92 ஆயிரத்து 500–க்கான காசோலைகளையும், 43 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 6 பெண்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 600 வீதம் மொத்தம் ரூ.21ஆயிரத்து 600 மதிப்பிலான தையல் எந்திரங்களையும், வன்கொடுமை தீர் உதவித்தொகையாக 9 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 3 பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்து 395 மதிப்பிலான தையல் எந்திரங்களையும், 5 பயனாளிகளுக்கு ரூ.21 ஆயிரத்து 225 மதிப்பிலான இஸ்திரிப்பெட்டிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்மேலும் கடந்த மார்ச் மாதம் நடந்த 10–ம் வகுப்பு, பிளஸ்–2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக 35 பேருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளையும், முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையாக 3 நபர்களுக்கு ரூ.48 ஆயிரத்திற்கான காசோலைகளையும், ஆயுட்கால மாதாந்திர நிதி உதவியாக 1 நபருக்கு ரூ.8 ஆயிரத்திற்கான காசோலையும், ராணுவ மத்திய நல நிதியின் கீழ் 1 நபருக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 15 நபர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், 16 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 63 ஆயிரத்து 840 மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார்சைக்கிளையும், தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத்திட்டத்தின் மூலம் 5 பயனாளிகளுக்கு மானியம் மற்றும் வங்கி கடனுதவியாக ரூ.19 லட்சத்து 35 ஆயிரத்து 764 மதிப்பிலான மினிவேன், ஆட்டோ வாகனங்களையும், வேளாண்மைத்துறையின் மூலம் 7 நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 525 மதிப்பில் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இடுபொருட்களையும், சமூக நலத்துறையின் மூலம் 10 நபர்களுக்கு தலா ரூ.54ஆயிரத்து 200–க்கான தையல் எந்திரங்களையும், ஆக மொத்தம் 293 நபர்களுக்கு ரூ. 1 கோடியே ரூ.42 லட்சத்து 15 ஆயிரத்து 299 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ– மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலந்து கொண்டனர்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி மணிமாறன், ஒன்றிய குழுத்தலைவர் மலர்மணிகண்டன், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், உதவி கலெக்டர்கள் பரமசிவம், சுப்பு, முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்(பொது) ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகணன், தனித்துணை கலெக்டர்கள் சதிதேவி(சிறப்புதிட்ட செயலாக்கம்), விஜயலட்சுமி (சமூக பாதுகாப்புத்திட்டம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, தாசில்தார் நாகராஜன் உள்பட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment