Monday 4 August 2014

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சம் அரசு ஒதுக்கீடு இடங்கள் காலி

பொறியியல் கலந்தாய்வு திங்கள்கிழமையோடு (ஆக.4) நிறைவுபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து ஆயிரத்து 441 பி.இ. இடங்கள் காலியாக உள்ளன.
இதில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டும் ஒரு லட்சத்து 600 இடங்கள் நிரம்பவில்லை.

பொறியியல் மாணவர் சேர்க்கையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கிய பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.4) நிறைவு
பெறுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பொறியியல் மாணவர் சேர்க்கை இம்முறை வெகுவாகக் குறைந்துள்ளது.

கடந்த 2013-14 கல்வியாண்டில் கலந்தாய்வில் இடம்பெற்றிருந்த 2,07,141 இடங்களில் 1,27,838 இடங்கள் நிரம்பின. 79,303 இடங்கள் காலியாக இருந்தன.
ஆனால், இப்போது கலந்தாய்வு நிறைவுபெற ஒரு நாளே உள்ள நிலையில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 839 இடங்கள், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,00,600 இடங்கள் என மொத்தம் 1,01,441 இடங்கள் காலியாக உள்ளன.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 1,02,636 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 56,336 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டனர். 441 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.

மெக்கானிக்கல் 60 சதவீதம்: பொறியியல் பாடப் பிரிவுகளைப் பொருத்தவரை மெக்கானிக்கல் பிரிவில் 60.19 சதவீத இடங்களும், சிவில் பிரிவில் 57.66 சதவீத இடங்களும், இசிஇ பிரிவில் 45.09 சதவீத இடங்களும், இஇஇ பிரிவில் 43.75 சதவீத இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 41.76 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.

இதுபோல், கடந்த ஆண்டு தமிழ்வழி பொறியியல் படிப்பு இடங்கள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில், இம்முறை பாதி இடங்கள்கூட இதுவரை நிரம்பவில்லை.
தமிழ் வழி மெக்கானிக்கல் பிரிவில் மொத்தமுள்ள 718 இடங்களில் 245 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. தமிழ் வழி சிவில் பிரிவில் 659 இடங்களில் 302 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

No comments:

Post a Comment