பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. இது குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் குழந்தைக்கு தேவையான புரதமும் இதில் அடங்கியுள்ளது. அனைத்து விதமான சத்துகளும் சரியான விகிதத்தில் தாய்ப்பாலில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும். முறையாக தாய்ப்பால் வழங்குவதன் ஐந்து வயதுக்குட் பட்ட குழந்தைகள் மரணங்களை வெகுவாக குறைக்கலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தாயின் உடல்நலனுக்கும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக ஆகஸ்ட் (1 - 7) முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம், காலம் காலமாக இந்தியாவில் இருக்கிறது. இருப்பினும் தற்போதைய காலமாற்றத்தில் தாய்ப்பால் வழங்க வேண்டும் என்பதை தாய் மார்களுக்கு சொல்லி செய்ய வேண்டியுள்ளது. தாமதமான திருமணங்களும், பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்திருப்பதும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் பிரச்னை ஏற்படுத்துகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
என்ன பாதிப்பு:தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். தாய்ப்பால் வழங்குவதன் மூலம், ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது மிக அவசியம். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், தாய்க்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கலாம்.
No comments:
Post a Comment