Wednesday, 6 August 2014

திருவாரூரில் பைபாஸ் சாலை கலெக்டர் நேரில் ஆய்வு


பதிவு செய்த நாள்

02 ஆக
2014
03:27
திருவாரூர்: திருவாரூரில், பைபாஸ் சாலை அமைய உள்ள இடத்தை, கலெக்டர் மதிவாணன் ஆய்வு செய்தார். திருவாரூர் நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகே, தஞ்சை சாலையிலிருந்து, கும்பகோணம் சாலையில் உள்ள காட்டூர் வழியாகவும், மயிலாடுதுறை சாலையில் உள்ள சேந்தமங்கலம் வழியாகவும், மற்றும் திருபள்ளிமுக்கூடல், பழவனக்குடி வழியாக, நாகை சாலையில் கிடராங்கொண்டானில் உள்ள திரு.வி.க., அரசு கல்லூரி வரை, 10 கி.மீ தூரத்துக்கு ரிங் ரோடு அமைக்க, 17 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. பின், நான்கு வழி சாலையை காரணம் காட்டி, இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின், திருவாரூர் நகருக்குள் நான்கு வழி சாலை அமையும் போது, பல்வேறு தனியார் கட்டிடங்கள் இடிபடும் என்பதால், மூலம் தஞ்சையிலிருந்து திருவாரூர் வழியாக நாகை வரையிலான, 80 கி.மீ., நான்கு வழி சாலை பணியும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், 2010ம் ஆண்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி மாநில அரசின் மூலம், 10 கி.மீ., தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்கும் பணிக்கு நிலம் எடுப்பதற்காக, 10 கோடியே, 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக, நிலம் எடுக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், ரிங் ரோடு அமையவுள்ள இடத்தை கலெக்டர் மதிவாணன் மற்றும் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வில்லாளன் ஆகியோர் பார்வையிட்டனர்.
நிலம் எடுப்பதற்கான பணியினை விரைவில் மேற்கொள்ளுமாறு, அலுவலர்களுக்கு, கலெக்டர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சையிலிருந்து, திருவாரூர் வழியாக நாகை வரையிலான, 80 கி.மீ., தூரத்துக்கு, நான்கு வழி சாலை அமையவுள்ள நிலையில், அதிக கட்டிடங்கள் உள்ள இடம் மற்றும் ரயில்வே கேட் உள்ள இடங்களில், பைபாஸ் சாலை அமைக்கப்படவுள்ளது. மாநில அரசின் ரிங் ரோடு அமையவுள்ள இடத்தை கையகப்படுத்தி கொடுக்கும் பட்சத்தில், தங்கள் செலவில் பைபாஸ் சாலை அமைத்துக் கொள்வதாக, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாநில அரசு மூலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு, நிலம் கையகபடுத்துவதற்கான ஆய்வு பணிகள் துவங்கியுள்ளது, என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment