Friday 1 August 2014

வாங்கும் பொருள்கள் குறித்து நுகர்வோர் அறிந்திருப்பது அவசியம்'

நுகர்வோர்கள் எந்த ஒரு பொருளை வாங்கும் முன்பு அதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக நுகர்வோர் தின விழாவுக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
மாவட்டத்தில் 45 பள்ளிகளில், 16 கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு, மாணவ பருவத்திலேயே நுகர்வோர் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
நுகர்வோர் வாங்கும் பொருள்கள் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். வாங்கிய பொருள்களுக்கு ரசீது கேட்டுப் பெற வேண்டும். ஏனெனில் பொருளின் தரம் குறைவாகவோ அல்லது வாங்கிய பொருளால் விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டாலோ சட்ட நடவடிக்கைக்கு இது உதவியாக இருக்கும்.
சந்தையில் நுகர்வோரை ஏமாற்ற சில நிறுவனங்கள், பொருள் மேல் ஒட்டப்பட்டுள்ள காலாவதி நாட்கள் தேதியை அகற்றி புதிதாக தயாரிக்கப்பட்ட பொருள் போல ஸ்டிக்கர்களை ஒட்டி விடுவார்கள். இதை நுகர்வோர்கள் கவனிக்க வேண்டும். சிறந்த நுகர்வோராக இருப்பவர்கள் மற்ற நுகர்வோருக்கு உதவியாக இருக்க வேணடும். மாணவர்கள் இளம் பருவத்திலேயே பொருள்களை வாங்கும் போது கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டுóமென்றார் மதிவாணன்.
நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி அளவில் சிறந்த நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment