Friday 9 January 2015

மகிந்த ராஜபக்ச தோல்வி: இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா



இடது: தோல்வியால் அதிர்ச்சியில் ராஜபக்ச - படம்: ராய்ட்டர்ஸ் | வலது: வெற்றியால் மகிழ்ச்சியில் சிறிசேனா - படம்: ஏ.எஃப்.பி
இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா 51.28% வாக்குகள் பெற்று ராஜபக்சவை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இலங்கையின் 7-வது அதிபர் தேர்தலில் 62,17,162 (51.28%) வாக்குகளைப் பெற்று சிறிசேனா வெற்றி பெற, ராஜபக்ச 57,68,090 வாக்குகளை (47.58%) மட்டுமே பெற்று தோல்வி கண்டார். இதன்படி இலங்கையின் அதிபராக சிறிசேனா தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அதிபராக மைதிர்பால சிறிசேனா வெள்ளிக்கிழமை மாலை கொழும்புவில் பதவியேற்கவுள்ளார் என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

இலங்கை மக்களுக்கு மைத்ரிபால சிறிசேனா நன்றி

இலங்கை அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றிப் பெறச் செய்த மக்களுக்கு தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார் மைத்ரிபால சிறிசேனா.

தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, "என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணையுடனான மைத்ரி யுகத்தை நோக்கி செல்வோம்" என்று கூறியிருக்கிறார்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இந்த கருத்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

ராஜபக்சவுக்கும் சிறிசேனா நன்றி

மேலும் சிறிசேனா, தேர்தலை நியாயமான முறையில் நடத்த ராஜபக்ச வழிவகை செய்ததால்தான் தான் அதிபராக முடிந்துள்ளது என்று ராஜபக்சவுக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தேர்தலில் ஜனநாயக முறைப்படி மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராஜபக்ச ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச
தேர்தல் முடிவுகள் முழுமயாக வெளிவருவதற்கு முன்பே வெள்ளிக்கிழமை அதிகாலையில், ராஜபக்ச தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார். மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப்படைப்படைக்கப்படும் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்தது.

அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை சந்தித்த ராஜபக்ச தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார்.
முடிவுக்கு வந்தத ராஜபக்ச ராஜ்ஜியம்
கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போர் ராஜபக்ச ஆட்சியில் முடிவுக்கு வந்ததால் அந்த நாட்டின் முடிசூடா மன்னனாக அவர் கொண்டாடப்பட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 1970-ல் முதன்முதலாக காலடி எடுத்து வைத்த ராஜபக்ச அரசியல் ஏணியில் சறுக்காமல் முன்னேறினார். 1994-ல் அமைச்சரானார். 2004-ல் பிரதமர் ஆனார். 2005-ல் முதல்முறையாக அதிபராகப் பதவியேற்றார். அவரது ஆட்சியில் 2009-ம் ஆண்டில் உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2010-ல் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
அந்த நாட்டின் அரசியல் சாசன விதிகளின்படி இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். அச் சட்டத்தில் திருத்தம் செய்து 3-வது முறையாக அவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளார்.
யார் இந்த சிறிசேனா
சில மாதங்களுக்கு முன்பு வரைகூட ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட எதிரணியில் வலுவான வேட்பாளர் இல்லை என்றே கூறப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் திடீரென காட்சிகள் மாறின.
ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான மைத்ரிபால சிறிசேனா யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் சுமார் 35 கட்சிகள் இணைந்து மைத்ரிபால சிறிசேனாவை களத்தில் இறக்கின.

No comments:

Post a Comment