அரை நூற்றாண்டுக்கு முன்பு, இதயநோயால் இறந்து போவதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் இருந்தன. அதை முந்திக்கொண்டு மரணத்துக்கான காரணங்களில் முதல் இடத்தைப் பிடிக்கும்தறுவாயில் இருக்கிறது புற்றுநோய்.
புற்றுநோய்தான் இருப்பதிலேயே மிக மோசமான பிரச்சினை. பரிணாம வளர்ச்சியிலும் பல செல் உயிரியல்பிலும் வேர்கொண்ட பிரச்சினை இது. இந்த முட்டுக்கட்டையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டும் அவ்வப்போது சிறுசிறு வெற்றிகளைப் பெற்றுக் கொண்டும்தான் இருக்கிறார்கள். இந்த வெற்றிகளைக் கொண்டு குழந்தைப் பருவப் புற்றுநோய் மரணங்களைக் குறைத்திருக்கிறார்கள். அதே போல இளைஞர்களிடையே புற்றுநோய் ஏற்படாமல் தடுத்திருக் கிறார்கள், சில சமயம் குணப்படுத்தியும் இருக்கிறார்கள். ஆனால், முதியவர்களுக்கு வரும் புற்றுநோய்களைப் பொறுத்தவரை அறுதியான வெற்றியென்று ஏதும் இல்லை.
கடைசியில் பார்த்தால், இந்த விளையாட்டில் புற்றுநோய்க்குத்தான் வெற்றி. ஆமாம், இறுதியாக வேறு எதனால்தான் நமக்கு மரணம் ஏற்படும்? முதுமையின்போது ஏற்படும் நோய்களுள் முதன்மையானவை இதயநோயும் புற்றுநோயும்தான். குறிப்பிட்ட ஒரு நோய்க்குப் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றால், அதிக அளவிலான மக்கள் நீண்ட காலம் வாழ்ந்து மற்றுமொரு நோய்க்குப் பலியாவார்கள் என்றே அர்த்தம்.
புற்றுநோயா, இதயநோயா?
புற்றுநோய் விஷயத்தில் தற்போது நிலவும் தேக்கநிலையே ஒரு விதத்தில் வெற்றிதான். நூறு ஆண்டுகளுக்கு முன்பு (அமெரிக்காவில்) சராசரி ஆயுள் காலம் என்பது அதிகபட்சமாக 55 வயது. இப்போது அது 79 ஆக ஆகியிருக்கிறது. 65 வயதை நீங்கள் எட்டிவிட்டீர்கள் என்றாலே 80 வயதுக்கு மேலே நீங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. புற்றுநோயால் மரணம் ஏற்படுவதற்கு சராசரி வயது 72. நாம் நீண்ட காலம் வாழ்ந்த பிறகுதான் அது நமக்கு நிகழும்.
இதயநோய் மருத்துவத்தின் வளர்ச்சி என்பது மெதுவாகத் தான் இருந்திருக்கிறது. எனினும், இதயநோய் மரணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. சரியான சாப்பாடு, உடற்பயிற்சி, ரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் போன்றவற்றின் உதவியால் இது சாத்தியமாகியிருக்கிறது. அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டால், அவற்றை இயந்திரக் கோளாறுகள்போல் - அதாவது அடைபட்ட குழாய், பழசான வால்வுகள் போல் - கருதி சீர்ப்படுத்த தற்காலிக வழி உண்டு. இந்த நடவடிக்கைகள் காரணமாக, 55-க்கும் 84-க்கும் இடைப்பட்ட வயதினர் இதயநோயால் இறப்பது குறைந்து, புற்றுநோயால் இறப்பது அதிகரித்துவருகிறது. இந்த வயது வரம்பைத் தாண்டி வாழ்ந்தால் விஷயம் நேர் எதிர், ஆம் - இதயநோய்தான் அப்போது வெற்றிகொள்கிறது.
எழுத்துப் பிழைகள்
புற்றுநோயை நோய் என்பதைவிட பெரும் நிகழ்வு என்றுதான் கருத வேண்டும். பரிணாம வளர்ச்சியின் அடிப் படைச் சமரசமொன்றின் விளைவுதான் அது. உயிருள்ள உடலானது வளர்ச்சி பெறும்போது, அதன் செல்கள் எல்லாம் தொடர்ச்சியாகப் பிளவடைகின்றன; அப்படிப் பிளவடையும்போது, தங்களுடைய மரபணு நூலகமாகிய டி.என்.ஏ-க்களைப் பிரதியெடுத்து அப்படியே தங்கள் வழித்தோன்றலாகிய செல்களுக்கு வழங்குகின்றன. அந்த வழித்தோன்றல்கள் தங்கள் வழித்தோன்றல்களுக்கு… இப்படியே நகல்களின் நகல்களின் நகல்கள் என்று போய்க்கொண்டே இருக்கின்றன. இந்தப் பயணத்தில் தவிர்க்கவே முடியாத வகையில் பிழைகள் ஏற்படுகின்றன. சில பிழைகள் கார்சினோஜன்களால் ஏற்படுபவை, ஆனால், பெரும்பாலானவை போகிறபோக்கில் ஏற்படுகிற எழுத்துப் பிழைகள் போன்றவையே.
மேற்கண்ட கோளாறுகளை அடையாளங்கண்டு அவற்றைச் சரிசெய்துகொள்வதற்கான சிக்கலான வழிமுறை களைச் செல்கள் யுகாந்திரங்களாக உருவாக்கிக் கொண்டு விட்டிருக்கின்றன. ஆனாலும், இந்தச் செயல்முறை முழுமை யானதல்ல, முழுமையானதாக என்றுமே இருக்க முடியாது. செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் என்பவைதான் பரிணாமத்தின் உந்துசக்திகள். அவை இல்லையென்றால் நாமெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்க மாட்டோம். அவ்வப்போது குறிப்பிட்ட வகைச் சேர்க்கையானது தனிப்பட்ட ஒரு செல்லுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தைத் தருவதுதான் இதில் நடக்கும் சமரசம். உடலோடு ஒன்றி ணைந்து செயல்படாமல் சுயேச்சையாக அந்த செல் வளர ஆரம்பிக்கிறது. இயற்கை அமைப்பில் பல்கிப் பெருகும் புது உயிரினம்போல், அந்த செல் புற்றுக்கட்டியாக வளர்கிறது. இந்த நிலையில் இந்தக் கோளாறைச் சரிசெய்வது அவ்வளவு எளிதல்ல.
கீழ்ப்படியாத இந்த நுண்ணிய கலகக்காரர்கள் கிட்டத்தட்ட 50 கோடி ஆண்டுகளாக முளைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதாவது, சிக்கலான பல செல் உயிர்கள் தோன்றியதிலிருந்து. பல செல் உயிரிகள் என்பவை கூட்டாகச் சேர்ந்து இயங்கும் செல்கள். பல்கிப் பெருக வேண்டும் என்று அவற்றுக்கு இயல்பாகவே இருக்கும் உந்துதலை அந்த செல்கள் தங்களால் இயன்ற அளவு இழுத்துப் பிடித்திருக்கும் இயல்புடையவை. அப்படிச் செய்ய முடியாத செல்கள், அதாவது புற்று செல்கள், டார்வின் கூறியதுபோல் அவை என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்துகொண்டிருக்கின்றன. மாற்றமடைதல், பரிணாம வளர்ச்சியடைதல், தனது அண்டை வீட்டுச் செல்காரர்களைவிட வலுவாதல், உடலிலேயே மிகவும் அதீதமாக நடந்துகொள்ளும் செல்களாக ஆதல்… இந்தச் செயல்களைத்தான் புற்று செல்கள் செய்கின்றன.
வெற்றிகளும் தோல்விகளும்
1975-க்குப் பிறகு, குழந்தைகளிடையே புற்றுநோய் மரணங்கள் பாதியாகக் குறைந்திருக்கின்றன. வயதானவர் களைப் பொறுத்தவரை, ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் சில வகைப் புற்றுநோய்களை, சிலவகைக் கூட்டு மருந்துகள், கதிரியக்கச் சிகிச்சை, அறுவைச்சிகிச்சை போன்றவற்றைக் கொண்டு குணப்படுத்திவிடலாம். வேறு சில வகைப் புற்றுநோய்களைச் சில ஆண்டுகள்வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சில சமயம் காலம் முழுக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஆனால், மிகக் கடுமையான புற்றுநோய்களைப் பொறுத்தவரை, மரணத்தைச் சில மாதங்கள் தள்ளிப்போடலாம் அவ்வளவுதான்.
ஒட்டுமொத்தமாக, நோய்த்தடுப்புதான் நமக்கு மிகவும் ஊக்கமூட்டும் பலன்களைக் கொடுக்கிறது. உலகமெங்கும், 15-லிருந்து 20% வரையிலான புற்றுநோய்கள் கிருமிகளால் தொற்றுகின்றன என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. குளிர் சாதன வசதிகள் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் குடல் புற்றுநோய் குறிப்பிடத் தகுந்த அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் இப்படிக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் கருப்பைவாய்ப் புற்றுநோயைக் கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டும் திறன் மிக்கவை.
போக வேண்டிய தூரம் அதிகம்
புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரங்களின் வெற்றி காரணமாக, அமெரிக்காவில் புற்றுநோய் மரணங்களில் 30 சதவீதத்துக்குக் காரணமாக இருந்த நுரையீரல் புற்றுநோய் சீராகக் குறைந்துவருகிறது. உடல் பருமனும், கூடவே நீரிழிவு நோயும் புற்றுநோய்க்கு இடம்கொடுக்கின்றன என்பதால், மேம்பட்ட பரிசோதனைகள் மூலம் மேலும் நாம் முன்னேற்றம் காண முடியும். தொழிற்சாலைகளால் ஆயிரக் கணக்கான வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலோடு கலக்கின்றன. விதிமுறைகளை மேலும் தீவிரமாக்கினால், புற்றுநோய் விகிதத்தை மேலும் குறைக்க முடியும்.
பெரும்பாலான முன்னேற்றங்கள் பணக்கார நாடுகளில்தான் ஏற்பட்டிருக்கின்றன. அரசியல் தரப்புகளில் போதுமான துணிவு இருந்தால், இந்த முன்னேற்றங்களை வறிய நாடுகளுக்கும் கொண்டுசெல்லலாம். அமெரிக்காவில், புற்றுநோய் விகிதத் தில் இனரீதியாக நிலவும் வேறுபாடுகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
அறிவியலில் தொடர்ந்து முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். சில வகையான புற்று நோய்களுக்கு அளிக்கப்படும், எதிர்ப்புசக்திக்கான புதிய சிகிச்சைகள் நம்பிக்கை வெளிச்சத்தைத் தருகின்றன. புற்றுநோயின் மரபணுத் தடத்தைத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய ஜெனோமிக் உள்ஆய்வுகள் (ஜெனோமிக் ஸ்கேன்ஸ்), செல்களில் ஏற்பட்டிருக்கும் சேதத்தைச் சரிசெய்து பழைய நிலைக்குக் கொண்டுவரும் நுண் எந்திரன்கள் (நானோ ரோபோ) என்றெல்லாம் புதுப்புது சாத்தியங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
நம்மில் சிலர் 200 வயதுவரை வாழக்கூடிய நாள் வரலாம். சாகாவரம் அளிக்கும் அருமருந்து கிடைத்தால் சரி; அப்படிக் கிடைக்காவிட்டால், எந்த ஒரு உடலுமே வாழ்க்கை ஏற்படுத்திய அத்தனை ஆபத்துகளையும் வெற்றிகொண்டு கடைசியில் ஒரு புள்ளியில் வந்து நின்றுதான் ஆக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மேலும்மேலும் செல் மாறுபாடுகள் சேர்ந்துகொண்டே வரும். இரட்டை சவால்களில் இதயம் தாக்குப்பிடித்து நிற்கிறது என்றால், கடைசியில் புற்றுநோய் காத்திருக்கும்.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை
No comments:
Post a Comment