திருவாரூர் அருகே போலி மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருவாரூர் அருகே கூடூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில மற்றும் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனார்கலி பேகம், கலால்துறை துணை ஆட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூடூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சங்கர் (28) மதுப்பாட்டில்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவரது வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல்போருக்குள் 950 போலி மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவையும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சங்கருக்கு உதவியாக இருந்த குன்னியூர் மாணிக்கம் மகன் கணேசன் (30), கிருஷ்ணமூர்த்தி மகன் முருகதாஸ் (20) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் போலியானதா அல்லது வெளிமாநில மதுபாட்டில்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், போலீஸார் அவற்றை ரசாயன சோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment