தேர்வில் வெற்றிபெற நேர மேலாண்மை மிக முக்கியம் என சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். சாதிக் கூறினார்.
"தினமணி', சாஸ்தா கல்வி நிறுவனங்கள் இணைந்து சென்னையில் சனிக்கிழமை நடத்திய "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ். சாதிக் பேசியது:
நான் பள்ளிப் படிப்பை மேற்கொண்ட காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. 11 ஆண்டுகள் படிக்க வேண்டும். அதன் பிறகு "இன்ட்டர் மீடியேட் என கல்லூரி சென்று படிக்க வேண்டும்.
அந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அறிவியல் பாடத்துக்கு 2.30 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள். இதில் முதல் பக்கத்தில் 40 மதிப்பெண்களுக்கு கொள்குறி தேர்வு முறை (அப்ஜெக்டிவ் டைப்) கேள்விகள் இடம்பெற்றிருக்க வேண்டும். மீதமுள்ள 60 மதிப்பெண்களுக்கு 10 கேள்விகள் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். இதற்கு எழுத்து வடிவில் பதிலளிக்க வேண்டும். இந்த 10 கேள்விகளும், எனக்கு நன்கு தெரிந்தவையாக இருந்தன.
பின்னர் தேர்வு எழுத ஆரம்பித்து முதல் பக்கத்தை முடித்து, இரண்டாம் பக்கத்தில் 5 கேள்விகளுக்குப் பதில் அளித்து முடித்திருந்த நிலையில் தேர்வு முடிய இன்னும் 30 நிமிடங்கள் தான் உள்ளன என தேர்வு கண்காணிப்பாளர் கூறினார்.
இதைக் கேட்டு, மீதமுள்ள 5 கேள்விகளுக்கும் அவசர, அவசரமாக பதிலளிக்க வேண்டியச் சூழல் ஏற்பட்டது.
அப்போது கைக் கடிகாரங்கள் கிடையாததால், தேர்வில் நேரத்தைக் கவனிக்க முடியாமல் போனது. தேர்வு முடிவுகள் வெளியானபோது, அறிவியல் பாடத்துக்கு 100 மதிப்பெண்களுக்கு 56 மதிப்பெண்கள்தான் கிடைத்தது.
இதன் காரணமாக, கல்லூரியில் "இன்ட்டர் மீடியேட்' சேருவதும், பட்டப் படிப்பில் சேருவதும் சவாலாக இருந்தது. பின்னர் சிபாரிசு மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலை இப்போது மேலும் மோசமாகி விட்டது. இன்றைக்கு மாணவர்களைப் பணிக்குத் தேர்வு செய்யும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை இடையே தோல்வி அடையாமலும், 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனரா எனப் பார்க்கின்றன. அவர்களை மட்டுமே பணிக்குத் தகுதியானவர்களாக கருதுகின்றன.
எனவே, மாணவர்கள் தேர்விலும், வாழ்விலும் வெற்றிபெற நேர மேலாண்மை மிக அவசியமாகும்.
தேர்வில் ஒரு மதிப்பெண்ணுக்கு எத்தனை நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கணக்கிட்டு, அதன்படி பதிலளிக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்லூரியில் சேருவதற்கு முன்...
மேலும், பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி மாணவர்கள் கூட, பட்டப் படிப்பில் குறிப்பாக பொறியியல் பட்டப் படிப்பு முதலாம் ஆண்டில் கணிதத் தேர்வில் தோல்வியடைவது வாடிக்கையாகி வருகிறது.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் மனப்பாட முறையில் படித்து தேர்ச்சி பெறுவதே இதற்கு காரணம்.
எனவே, பி.இ. சேரப் போகும் மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிந்து விடப்படும் 2 மாத விடுமுறைக் காலத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 கணிதப் பாடங்களை புரிந்து படித்துக் கொள்வது அவசியம்.
வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள படிப்புகள்: இதுபோல் பிளஸ்-2 முடித்து நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் அனைவரும் முதலில் மருத்துவத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அது கிடைக்கவில்லையெனில் அண்ணா பல்கலைக்கழகம் என்ற நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.
இதைத் தாண்டி சிறந்த படிப்புகளில் சேருவதற்கான வழிகளும், உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய ஏராளமான படிப்புகளும் உள்ளன.
அதாவது, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவப் படிப்புகள், ஐஐடி, என்ஐடி, ஐ.ஐ.எஸ்சி. போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு பல்வேறு அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் உள்ளன.
இந்தத் தேர்வில் தகுதி பெறுவதன் மூலம் உயர் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும்.
இதுதவிர, துணை மருத்துவப் படிப்புகள், ஹோட்டல் மேலாண்மை, விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய ஏராளமான படிப்புகளும் உள்ளன. எனவே, இதுபோன்ற படிப்புகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் சாதிக்.
ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியர் அர்த்தநாரி: மாணவர்கள் தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். தேர்வறையில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும், அதை முழுமையாக படித்து தெரிந்த கேள்விகள் எவை, தெரியாதவை எவை என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதிலளித்துவிட வேண்டும்.
மேலும், நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளிப்பது என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
மேலும் விடைத் தாளில் ஒவ்வொரு வரிக்கும் சரியான இடைவெளி விட்டு, ஒவ்வொரு பதிலுக்கும் 1 செ.மீ. அளவுக்கு இடைவெளி கொடுத்து எழுத வேண்டும். தேர்வு நேரத்தில், விடைகளை அழகுபடுத்துதல் என்ற பெயரில் வண்ண வண்ண கோடுகளைப் போடும் செயலில் ஈடுபடவேண்டாம். இதனால் நேரம்தான் வீணாகும்.
அதோடு, ஒரு மதிப்பெண் கேள்விக்கு ஒரு வரியில் மட்டுமே பதிலளிக்க வேண்டும். பிற கேள்விகளுக்கும் விடை என்னவோ அதை மட்டும், பாயின்ட்டுகளாக எழுத வேண்டும்.
தேர்வு எழுதி முடித்த பிறகு, அனைத்து கேள்விகளுக்கு சரியாக பதிலளித்திருக்கிறோமா, கேள்வி எண்ணும், பதிலுக்கு அளித்துள்ள எண்ணும் சரியாக போட்டுள்ளோமா என்பதை பார்ப்பது மிக முக்கியம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தேர்வுத்தாள் திருத்துபவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதோடு, அதிக மதிப்பெண்ணையும் பெற முடியும் என்றார்.
"இயற்பியலை புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம்'
இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்து இயற்பியல் ஆசிரியர் எம். கல்பனா "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விளக்கினார்.
அப்போது அவர் பேசியது: "புளு பிரிண்ட்' அடிப்படையில் தேர்வுக்கான பாடங்களை திட்டமிட்டு படிக்க வேண்டும். இயற்பியலில் 200 மதிப்பெண் எடுப்பதற்கு ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியான பதில் எழுதுவது முக்கியம்.
பாடங்களையும் அவற்றுக்கான பொருள்களையும் புரிந்து படித்தால் ஒரு மதிப்பெண் கேள்விகள் முப்பதுக்கும் சரியான விடை எழுதலாம்.
என்ன படிக்கிறோம் என்பதை புரிந்துப் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். நீண்ட நாள்களுக்குப் பாடங்கள் நினைவில் இருக்க வேண்டுமென்றால் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment