Friday 2 January 2015

முத்துப்பேட்டை அருகே மோதல்: கல்வீச்சு, 2 பேர் காயம்


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே புதன்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். மேலும், கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது.
புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் ஜாம்பவானோடை தர்ஹா அருகே புத்தாண்டை வரவேற்கும் விதமாக முழக்கங்களை எழுப்பிச் சென்றனராம். அதை அங்கிருந்த சிலர் கண்டித்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முகமது இமாம், கலீல்ரஹ்மான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
மேலும், இரு பிரிவினரிடேயே மோதல் தொடர்ந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதையறிந்து, அங்கு சென்று அம்மா பள்ளிவாசலின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தினர். இதில் 3 வீடுகளின் வேலிகள் சேதப்படுத்தப்பட்டன.
தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் செம்படவன்காட்டு பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
ஜாம்பவானோடை தர்ஹா நிர்வாக அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலி, கலீல் ரஹ்மான் ஆகியோர் தனித்தனியே புகார் அளித்தனர். சாமிசெந்தில், பாலமுருகன், செந்தில்நாதன், ராஜகோபால், வீரமணி உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் காளிராஜ் மகேஷ்குமார் (திருவாரூர்), தர்மராஜன் (தஞ்சாவூர்), கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அனார்கலி பேகம், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கணபதி, அப்பாசாமி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment