Friday, 1 April 2016

tnelections2016:தொலைக்காட்சி விளம்பரத்துக்கு முன் அனுமதி தேவை



தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய முன் அனுமதி தேவை என்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எம். மதிவாணன் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூர் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தொலைக்காட்சிகளில் மதம், இனம், மொழி, சாதி அல்லது வகுப்பு குறித்து எவ்வித காரணங்கள் அடிப்படையிலும் பகைமை உணர்வைத் தூண்டக்கூடிய அல்லது பொது அமைதியைப் பாதிக்கக்கூடிய விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யக் கூடாது.
சட்டத்துக்குப் புறம்பானது, ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தைப் பாதிப்பதும், உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும் அல்லது அதிர்ச்சி தரக்கூடிய, வெறுப்பை அல்லது புரட்சியைத் தூண்டும் விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது.
உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தினர் விளம்பரத்தைத் தயாரித்தப் பிறகு அந்த விளம்பரத்தை ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் காண்பித்து ஒளிபரப்பத் தகுதியானது என்று மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சான்று பெற்று ஒளிபரப்ப வேண்டும்.
வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினர் சார்பில் விளம்பரங்களை ஒளிபரப்ப, அந்த விளம்பரம் நாள் ஒன்றுக்கு எத்தனை முறை, எத்தனை நாள்கள் ஒளிபரப்பப்பட உள்ளது, எந்த நேரத்தில் விளம்பரம் ஒளிபரப்பப்படும், அதற்கான கட்டணம் ஆகியவை குறித்து முன்னரே கடிதம் மூலம் தெரிவித்து ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
தனிநபர்களிடம் தேர்தல் தொடர்பான விளம்பரம் பெறப்பட்டால் அந்த விளம்பரம் எந்த வேட்பாளரைச் சார்ந்தது அல்லது எந்த அரசியல் கட்சியினரைச் சேர்ந்தது என்பதை சம்பந்தப்பட்ட நபரிடம் கடிதம் மூலம் பெற வேண்டும்.
அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் அல்லாத பிற விளம்பரங்கள் ஒளிபரப்பும்போது சம்பந்தப்பட்ட நபரிடம் இது எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ, வேட்பாளருக்கு ஆதரவானதோ அல்ல என்ற உத்தரவாதத்தைப் பெற வேண்டும்.
எந்த ஒரு விளம்பரமாவது தக்க அனுமதி பெறாமல் ஒளிபரப்பப்பட்டால் அது ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினரால் அது குறித்த விவரங்கள் பதியப்பட்டு, அதனடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment