Saturday, 9 April 2016

திருவாரூர் மாவட்ட தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் இன்று வருகை


மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் விஜயகுமார், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (ஏப். 9) வருகிறார்.
18 வயது நிரம்பிய எந்த ஒரு இந்தியக் குடிமகனும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதற்காக தேர்தல் ஆணையம் பிரசார ஊர்திகள், பிரசாரப் பாடல்கள், கலைநிகழ்ச்சிகள், பேரணிகள், ஊர்வலங்கள், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்கள், குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விழிப்புணர்வுப் பணிகள் எப்படி நடைபெற்றுள்ளது, இதில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்காக இரு மாவட்டங்களுக்கு ஒரு தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளரை முதன்முறையாக மத்திய அரசின் சார்பில் அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மத்திய அரசின் இந்திய ஆட்சிப் பணியாளர் தகுதியில் உள்ள விஜயகுமாரை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. வெள்ளிக்கிழமை சென்னை வந்த தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களைச் சென்னையில் சந்தித்தார்.
தொடர்ந்து, சனிக்கிழமை 9-ஆம் தேதி காலை திருவாரூர் வரும் தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர், மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்கள் வாக்களிக்கக் கூடிய இடங்கள் எத்தனை உள்ளது. இதற்காக வாக்காளர்களிடம் எப்படிப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட தேர்தல் விழிப்புணர்வுக் குழுவினரிடம் கலந்தாலோசிக்கிறார்.
பின்னர், வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னர், நாகை மாவட்டத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment