Wednesday, 27 April 2016

திருவாரூர் நகராட்சிக் குப்பைக் கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?


திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 31 வார்டுகளில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத் தலைநகராக திருவாரூர் இருப்பதால் அண்மைக் காலமாக குடியிருப்புப்  பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. நகர் முழுவதும் அள்ளப்படும் டன் கணக்கிலான குப்பைகள் நெய்விளக்குத் தோப்புப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன.
இங்கு கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது சிலரால் தீவைத்து கொளுத்தி விடப் படுகிறது. குப்பையில் பிடிக்கும் தீ, பல நாள்களுக்குத் தொடர்ந்து எரிகிறது. இதனால் ஏற்படும் புகை, சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளுக்குச்  செல்வதால் புகை மண்டலத்தில் மக்கள் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் நகராட்சியின் பல இடங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கழிப்பறை கழிவுநீர் குப்பைக் கிடங்கின் முன்பகுதியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அந்தக் கழிவுநீர் வழிந்தோடி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எரியூட்டப்படும் சடலங்கள்...
மேலும், குப்பைக் கிடங்கு அருகில் இருக்கும் மயானத்தில் நகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட சடலங்கள் 70 சதவீதம் எரியூட்டப்படுகின்றன.  மயானத்தில் இடைவிடாமல் சடலங்கள் எரிந்து கொண்டிருக்கிறது.
மயானத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமாகி இருக்கிறது. குப்பைக் கிடங்கு, மயானத்திலிருந்து வெளியேறும் புகையினால் இருதய நோய், பார்வையிழப்புகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
நெய்விளக்குத்தோப்பு பகுதி மக்கள் மனை வரி, குடிநீர் வரி என அரசின் அனைத்து வரிகளையும் செலுத்துகின்றனர். இருப்பினும், இவர்கள் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே, மக்களைப் பாதிக்காத வகையில் குப்பைக் கிடங்கு, மயானத்தைச்  சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மறு சுழற்சியாக்கப்படுமா...
டன் கணக்கில் குவியும் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகம் இருக்கின்றன. தவிர, உணவகக் கழிவுகள், வாழை இலை, காகிதத் தாள்களும் குவிகின்றன. இக்குப்பையிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களைத் தனியாகப் பிரித்து மறுசுழற்சிக்குக் கொண்டு வரலாம்.
அவற்றை பிளாஸ்டிக் சாலைகள் போட பயன்படுத்தலாம். இதற்கு மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் இப்பகுதியினர்.

No comments:

Post a Comment