திருவாரூரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நுங்கு, இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சுட்டெரிக்கும் வெயில்
திருவாரூரில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 95 டிகிரிக்கும் அதிகமாக வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் குளிர்பானங்களையும், இயற்கையான நீர் ஆகாரங்களையும் நாடி செல்கின்றனர். இதில் வேதி பொருட்கள் கலந்த குளிர்பானங்களை பெரும்பாலானவர்கள் தவிர்த்து வருகிறார்கள். இதனால் பனை நுங்கு, இளநீர் போன்ற இயற்கை நீர் ஆகாரங்களுக்கு கிராக்கி அதிகரித்து உள்ளது.
உரத்தின் தேவை இல்லாமலேயே வளரும் தன்மை கொண்டது பனை மரம். அத்தகைய பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கில் சுண்ணாம்பு, கால்சியம், புரோட்டின் சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதேபோல இளநீரும் உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடை காலத்தில் உடல் சூட்டை தணித்து, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத உணவு பொருளாக விளங்குவதால் திருவாரூரில் நுங்கு, இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
விற்பனை அதிகரிப்பு
திருவாரூர் நகர பகுதிகளில் நுங்கு, இளநீர் கடைகள் ஆங்காங்கே புதிதாக முளைத்திருக்கின்றன. இதுபற்றி நுங்கு, இளநீர் வியாபாரிகள் கூறியதாவது:-
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும் உணவு பொருட்களாக இளநீரும், நுங்கும் விளங்குகின்றன. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பனை மரம் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் இருந்து தேவையான அளவு நுங்கை வெட்டி விற்பனை செய்து வருகிறோம். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கடந்த சில நாட்களாக திருவாரூரில் நுங்கு, இளநீர் விற்பனை அதிகரித்து இருக்கிறது. நுங்கு 5 சுளைகள் ரூ.10 வீதம் விற்பனை செய்து வருகிறோம்.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment