Monday 18 April 2016

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விரைவில் ரூ10,000 குறைந்தபட்ச ஊதியம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஊதியம் அளிக்கும் வகையில் மத்திய அரசு விரைவில் நிர்வாக உத்தரவைப் பிறப்பிக்கும் என்று மத்திய தொழிளாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முக்கியமாக குறைந்தபட்ச ஊதியத்தை அனைவருக்கும் சமமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஊதியம் அளிக்க விரைவில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க இருக்கிறது.
இந்தக் குறைந்தபட்ச ஊதியத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்காது. எனவே, தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதனை நிர்வாக உத்தரவாக நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பான விதிகளை வகுத்து, ஒப்புதலுக்காக சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் இது தொடர்பான அறிவிக்கை வெளியாகும். அதைத் தொடர்ந்து மாநில அரசுகள் புதிய முடிவை அமல்படுத்தும்.
மொத்தவிலைக் குறியீட்டு எண், அகவிலைப் படி ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன் அடிப்படையிலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment