Thursday, 14 April 2016

ஒ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்



திருவாரூர் அருகே ஒ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் வாகனங்களை சிறைபிடித்தனர். 

சாலைமறியல்

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி. சார்பில் பூமிக்கு அடியில் ஆழ்குழாய் அமைத்து ஆயில், கியாஸ் எடுத்து வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகமாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஒ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுத்து செல்லும் குழாய் அடிக்கடி சேதம் அடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள பெருந்தரக்¢குடி ஊராட்சி கடலங்குடியில் பூமியில் ஆழ்குழாய் அமைத்து பல ஆண்டுகளாக கச்சா எண்ணையை எடுத்து வருகிறது. இந்த இடத்தின் அருகில் புதிதாக ஆழ்குழாய் அமைக்க திட்டமிட்டு, அதற்கு தேவையான கருவிகளை லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டதிற்கு மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் உமாசங்கர், தி.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளைநிலங்களை விட்டு ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறிட வேண்டும். புதிய ஆழ்குழாய் அமைக்க கூடாது என்கிற கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் சிறைபிடிப்பு

தகவல் அறிந்த தாசில்தார் தங்கமணி, போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்கப்படும் எனவும், தேர்தல் முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய தீர்வு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் கடலங்குடியில் இருந்து ஒ.என்.ஜி.சி. இடத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மூங்கில் கம்புகளை வைத்து தடுப்பு அமைத்தனர். இதனால் உள்ளே சென்ற வாகனங்கள் வெளிவர முடியாமல் சிறைபிடித்தனர். மேலும் வெளியில் இருந்து வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத சுழ்நிலை உருவானது. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment