Wednesday 6 April 2016

வெப்பத்தை தணிக்கும் கிருணிப் பழங்கள்


கோடைக்கால வெப்பத்தைத் தணிக்கும் கிருணிப் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலையும் குறைந்துள்ளது.
 உடற்சூட்டை தணித்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையை கிருணிப்பழங்கள் கொண்டுள்ளன. காஞ்சிபுரம், மதுராந்தகம், உளுந்தூர்பேட்டை, திருத்தணி, கூடுவாஞ்சேரி, திருவண்ணாமலை, வேளச்சேரி, ஆண்டிப்பாக்கம், ஆந்திரத்தில் மதனஹள்ளி, அனந்தப்பூர், நெல்லூர், தடா, மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு விவசாயிகளால் பயிரிடப்படுகிறது. 
 அதிக நீர்வளம் கொண்ட ஏரிப்பகுதி, கிணற்றுப்பாசனம் போன்ற விளைநிலங்களில் பயிரிடலாம். அதிக பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், குறைந்த நாளில் பலனைப் பெறலாம். இப்போது மகசூல் எடுக்கும் பருவம் என்பதால், கிருணிப்பழங்கள் பயிரிடுவதும், வரத்தும் நாள்தோறும் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து மதுராந்தகத்தைச் சேர்ந்த விவசாயி ராஜலிங்கம் கூறியதாவது:-
 நீர்ப்பாசனமும், உரத்தன்மையுடன் கூடிய செம்மண் விளைநிலத்தில் பயிரிட்டால் மகசூல் அதிகம் கிடைக்கும். 60 நாள்களில் விளையும் தன்மையுடையது. வளம் நிறைந்த விளைநிலத்தில் ஏக்கருக்கு 20 டன்னும், வளம் சற்றுக் குறைவான விளைநிலத்தில் 15 டன் வரையிலும் மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு பழமும் குறைந்தது 2 கிலோ முதல் 5 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
 கடந்த ஆண்டு ஒரு டன்னுக்கு 18 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போதைய நிலையில் வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு டன் ரூ.12 ஆயிரம் என குறைந்துள்ளது என்றார்.
 இதுதொடர்பாக கோயம்பேடு காய்கனி வியாபாரி செüந்தர் கூறுகையில்:-
 கடந்தாண்டு ஒவ்வொரு நாளும் 15 லோடுகள் வரையில் வரத்துக் குறைவாக இருந்தது. இதனால், விலை அதிகமாக இருந்தது. தக்காளி போன்ற காய்கறிகளின் விலை குறைவால், விவசாயிகள் அதிக அளவில் கிருணிப்பழங்களை பயிரிட்டுள்ளனர். இதனால், 50 லோடுகள் என வரத்து அதிகரித்துள்ளது. எனவே, விலையும் குறைந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment