கோவை அருகே தேர்தல் அதிகாரிகளைப் போல நடித்து ரூ.1.20 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பீளமேடு போலீஸார் தெரிவித்துள்ளதாவது: கோவை செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்.முருகன் (48). இவர் அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை பீளமேடு அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.1.20 லட்சம் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தில் பீளமேடு, தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்றில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், முருகனை வழிமறித்து நிறுத்தியது. தங்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரிடம் சோதனையிட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் முருகன் வைத்திருந்த ரூ.1.20 லட்சத்தை பறிமுதல் செய்து கொண்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர். பணத்தை வங்கியிலிருந்து முறையாக எடுத்து வந்ததற்கான ஆதாரங்களை முருகன் காட்டியபோதும் அந்த நபர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டனர். இறுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆதாரங்களை சமர்பித்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு காரில் தப்பிவிட்டனர்.
அவர்களை உண்மையான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் என நம்பிய முருகன், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து பார்த்துள்ளார். ஆனால் அப்படி யாரும் பணத்தை பறிமுதல் செய்யவில்லை என வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டது முருகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குறித்து அவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment