திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் 8,731 பேர் இறந்ததையடுத்து, அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம். மதிவாணன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் துணை வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அவர் பேசியது:
தமிழக பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலை சுமுகமாக நடத்தவும், இம்முறை தமிழகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இப்பணிகளின் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு கடந்த 20.1.2016 அன்று இறுதிப் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 15 முதல் 29.2.16 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, பிப்ரவரி 29-ஆம் தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அலுவலக வலைதளத்தில் இதன் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 8,731 பேர் இறந்ததையடுத்து, அவர்களின் பெயர் நீக்கப்பட்டதின் விவரத்தின் அச்சுப்பிரதி அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்ட பிறகு 4 பேரைவைத் தொகுதியில் மொத்தம் 9,60,110 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மதிவாணன்.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக செயலர் பூண்டி கே. கலைவாணன், நகர காங்கிரஸ் தலைவர் சம்பத், நகராட்சித் தலைவர் வெ. ரவிசந்திரன் (அதிமுக) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment