Tuesday 26 April 2016

முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு பிரமாணப் பத்திரத்தில் தகவல்


முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தபோது, இணைப்பாக அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.113.73 கோடி எனத் தெரிவித்துள்ளார்.
 தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், 2014-15ஆம் நிதியாண்டில் தனது வருவாய் ரூ.95.23 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 இதுகுறித்து, பிரமாணப் பத்திரத்தில் அவர் தெரிவித்த தகவல்:
 ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், கோடநாடு எஸ்டேட், ராயல் ப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ், க்ரீன் டீ எஸ்டேட் போன்ற நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதாகவும், அதில், மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் அவற்றில் செய்யப்பட்ட முதலீடு ரூ.27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 என்னென்ன கார்கள்? 1980-ஆம் ஆண்டு முதல் அம்பாஸிடர் கார் இருப்பதாகவும், மகேந்திரா ஜீப், மகேந்திரா போலிரோ, டெம்போ டிராவலர், சுவராஜ் மஸ்தா மாக்ஸி, காண்டஸா, டெம்போ ட்ராக்ஸ், டயோடா ப்ராடோ (இப்போது பயன்படுத்தும் வாகனம்) ஆகிய 9 வாகனங்கள் இருப்பதாகவும் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.42.25 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 அசையும்-அசையா சொத்துகள்: நகை, முதலீடுகள், வாகனங்கள் என அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 எனத் தெரிவித்துள்ளார்.
 இப்போது வசித்து வரும் போயஸ் தோட்ட இல்லமானது தன்னாலும், தனது தாயாலும் 1967-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி வாங்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். ஹைதராபாத், சென்னை தேனாம்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தனது அசையா சொத்துகளின் இப்போதைய மதிப்பு ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 எனக் கூறியுள்ளார்.
 மொத்தமாக, அசையும், அசையாத சொத்துகளின் மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சத்து 38,585 எனத் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகள், அதற்கு மேல் தண்டனை விதிக்கக் கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள் ஏதும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment